நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாட்கள்; கட்டமைப்புச் சீர்த்திருத்தங்களே மிக முக்கியம்

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாள் நிறைவையொட்டி, மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் இது. இந்த 100 நாள்களில் என்ன நடந்தது? கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயின? ஹராப்பான் முன்னெடுக்க வேண்டிய உடனடி சீர்திருத்தங்கள் என்னென்ன என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

நம்பிக்கைக் கூட்டணி (ஹராப்பான்) புத்ராஜெயாவைக் கைப்பற்றி கடந்த ஆகஸ்டு 17-ஆம் நாளோடு 100 நாட்கள் முடிவடைகிறது. கடந்த 14-வது பொதுத் தேர்தலின்போது, ஹராப்பான் ‘100 நாட்களில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்’ எனப் பிரச்சாரம் செய்தது நாம் அறிந்ததே. கடந்த சில நாட்களாக, அரசு சார்பற்ற நிறுவனங்கள், இயக்கங்களின் பல்வேறு விமர்சனங்களுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதார நிலை படுமோசமாக இருப்பதனால், பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் இருப்பதையும், மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ‘மலேசியாகினி’ பத்திரிக்கையாளர்களுடனான ஒரு சந்திப்பின்போது விளக்கமளித்தார்.

துணைப் பிரதமர் வான் அஸிசா குறிப்பிடுவதுபோல, நம்பிக்கைக் கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கடும் முயற்சி செய்கிறார்கள் என்றால், துன் டாக்டர் மகாதீர் முகமது கொடுக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்கலாம். ஆனால், இந்த 100 நாட்களில் சில அமைச்சர்கள் கூறும் முன்னுக்குப்பின் முரணான விளக்கங்கள், தடுமாற்றங்கள் மக்களைக் குழப்பமடைய வைப்பது வருத்தத்திற்கு உறியது.

நம்பிக்கைக் கூட்டணியின் அரசியல்வாதிகள், பிரச்சாரத்தில் கூறிய வாக்குறுதிகளை உண்மையிலேயே சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்களா? அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? அல்லது, அதிகமான வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவற்றை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டனரா? எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

61 ஆண்டுகள் தேசிய முன்ணனி (அம்னோ-பிஎன்) ஆட்சிக்குப் பிறகு, நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி சில மாற்றங்களையும் சீர்த்திருத்தங்களையும் 100 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தி பெரும் மாறுதலை கொண்டுவரும் என மக்களும் சமுதாய அமைப்புகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தச் சீர்த்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு முன், ஆழ்ந்த ஆய்வுகளும் புரிந்துணர்வும் அவசியம் தேவை. எனினும், சீர்த்திருத்தங்களைக் கொண்டுவர நம்பிக்கைக் கூட்டணி உண்மையாக விரும்புகிறதா? கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்வதோடு, அதற்காக கூறும் காரணங்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அடிப்படையில் நம்பிக்கை கூட்டணியின் நோக்கம்தான் என்ன?

உதாரணத்திற்கு, ஊராட்சிமன்ற தேர்தல்களை நடத்த, 2008-ஆம் ஆண்டு முதலே அவர்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அதற்காக, சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநில அரசாங்கங்கள் சில முயற்சிகளும் மேற்கொண்டனர். எனவே, இது மறுபடியும் ஆய்வு செய்ய வேண்டிய ஒரு புதிய பிரச்சனை அல்ல. ஆயினும், நம்பிக்கைக் கூட்டணி அதை நடைமுறைபடுத்த தயங்குவது ஏன்? ஊராட்சிமன்றத் தேர்தல் விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணியினர் இடையேயே எதிர்ப்புகள் உள்ளதா? ஊராட்சிமன்றத் தேர்தலை நடைமுறைப்படுத்துவதற்கு, நாட்டின் நிதி நிலைமையைக் காரணம் காட்டுவதும், அதை ஐந்து ஆண்டுகளுக்குத் தள்ளி வைப்பதும் நியாயமற்ற செயலாகும். ஹராப்பான் தனது நேர்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் ஊராட்சிமன்றச் சட்டம் 1976-ஐ திருத்தம் செய்து, ஊராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. இதுதான் ஊராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் கொண்டுவருவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கையாக இருக்கும்.

குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் விஷயத்திலும் இதே நிலைப்பாட்டைதான் நம்மால் காண முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 10-ல், மனிதவள அமைச்சரின் ‘புதிய குறைந்தபட்ச சம்பள’ நியமன அறிவிப்பு பிரதமர் துன் மகாதீரால் தள்ளிவைக்கப்பட்டது, ஏற்கனவே இது 3 மாதத்திற்குத் தாமதமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் குறைந்தபட்ச சம்பள உயர்வு குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார், அதாவது, ‘சம்பளத்தை ஏற்றினாலும் மக்களுக்கு வாங்கும் திறன் குறைவாக இருக்குமானால், அது உற்பத்தியையும் அதிகரிக்காது’ என்றும் ‘இது சம்பள உயர்வில் எவ்வித வேறுபாட்டையும் ஏற்படுத்தாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக, நாம் கூறுவது, சட்டத்திட்ட விதிகளுக்கு உட்பட்டு குறைந்தபட்ச சம்பள திட்டத்தினை மீளாய்வு செய்து, வாழ்க்கை செலவினங்களுக்கு ஏற்ப சம்பளத்தையும் உயர்த்த வேண்டும். இதன் மூலம் உழைக்கும் மக்கள் வறுமை பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பார்கள்.

குறைந்தபட்ச சம்பள உயர்வு திட்டம் மேலும் தாமதப்படுத்த கூடாது என பி.எஸ்.எம். கருதுகிறது. ரி.ம 1500 2018-ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச சம்பள உயர்வு நியமன இலக்காகும். அமைச்சர்கள் கூறுவதுபோல் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நடைமுறைக்கு வரும் நீண்ட கால நியமன இலக்கல்ல அது. மேலும், தீபகற்ப மலேசியா மற்றும் சபா சரவாக்கிற்கும் சமமான குறைந்தபட்ச சம்பளத் தொகையை அறிவிப்பதிலிருந்தும் இந்த 100 நாளில் ஹராப்பான் தோல்வி கண்டுள்ளது.

ஹராப்பானின் 100 நாள் செயல்திறன்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். புதிய அரசாங்கம் புதிய சீர்த்திருத்தங்களுடன் ஆட்சியைக் கட்டமைக்க முடியுமா என்பதில் மக்களாகிய நாம் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் யாவும், பள்ளி மாணவர்கள் கருப்பு நிற காலணி அணிதல் மற்றும் ‘சோடா’ பானத்திற்கு வரி விதித்தல் போன்ற விஷயங்களைவிட மிக முக்கியமானதாகும்.

பக்காத்தான் ஹராப்பான் உடனடியாக செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள் :-

  1. 1980-களில் கொண்டு வரப்பட்ட தனியார்மய கொள்கையை ஒழிக்க வேண்டும். பொதுச் சேவைகள் மற்றும் பொதுச் சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு, மக்களின் அத்தியாவசிய சேவைகளின் விலைகள் ஏற்றம் காணாமல் இருப்பதையும் அரசாங்கத்தினர் கவனித்துகொள்ள வேண்டும்.
  2. அரசுசார் நிறுவனங்கள் (ஜி.எல்.சி) மற்றும் அரசுசார் முதலீட்டு நிறுவனங்கள் (ஜி.எல்.ஐ.சி) ஆகிய இரு நிறுவனங்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றுகின்றனர். எனவே, அவர்கள் தங்களின் முதலீட்டினாலும் வணிகத்தாலும் பெறுகிற செல்வத்தை மக்களுடன் பகிர்வதை அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டும். ஏனெனில், இன்றைய நிலையில், இவ்விரு நிறுவனங்களும் அரசுசார் நிறுவனங்களாய் இருந்தும், தனியார் நிறுவனங்களைப் போல் எல்லா விஷயங்களிலும் இலாபத்தையே முன்னிறுத்தி, அதனால் உண்டாகும் விளைவுகளைக் கருத்தில் கொள்வதில்லை. ஜி.எல்.சி. நிறுவனமானது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நில அபகரிப்பு, கட்டாய வெளியேற்றம், தொழிலாளர் மத்தியில் பாரபட்ச நடைமுறை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். எனவே, அரசாங்கம் ஜி.எல்.சி-யை ஜனநாயகமாக்குவதோடு, மக்களுக்கான நிறுவனமாகவும் உருமாற்ற வேண்டும். ஜி.எல்.சி மற்றும் ஜி.எல்.ஐ.சி ஆகிய நிறுவனங்களைப் பிரதமர் துறையின் அதிகாரத்தில் வைப்பது முறையானதல்ல.
  3. மத்திய மற்றும் மாநில அரசு நிலப் பரிவர்த்தனைகளை உடனடியாக நிறுத்தி, அதை ஆய்வுக்குட்படுத்தினால் அவை அனைத்தும் அரசுசாரா நிறுவனங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க இயலும். இதன் மூலம், மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், மலிவு வீடுகள் போன்றவற்றைக் கட்டும் பணிகளை அரசாங்கமே மேற்கொள்ள முடியும்.
  4. நாட்டின் உணவு பாதுகாப்பை அதிகரிப்பது, புறம்போக்கு நிலங்களை பறிமுதல் செய்வது, விவசாயம், நெல்வயல், கால்நடை வளர்ப்புப் போன்ற துறைகளில் ஈடுபட விரும்பும் இளைய சமுதாயத்திற்கு கடன்களை வழங்குவது போன்றவற்றை, தேசிய அளவில் செயல்படுத்த வேண்டும். மேலும், மலிவான விலையில் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வதிலும், உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
  5. பராமரிக்கப்படும் காடுகளிலிருந்து மரங்களை வெட்டுதல் மற்றும் சுரங்க உரிமங்கள் குறித்த சமீபத்திய அரசாணைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். மேலும், மேம்பாட்டுத் திட்டங்களுக்காகச் சமீபத்தில் அரசாணைகள் வழங்கப்பட்ட காடுகளை மீண்டும் உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும். அழிவிலிருந்து பாதுகாக்க, காடுகளையும் மரங்களையும் அழிப்பதை முடிந்தவரை விரைந்து நிறுத்த வேண்டும்.
  6. விகிதாசார முறையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவ உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பலதரப்பட்ட குழுக்களின் பிரதிநிதிகள் அங்கே இருப்பதன்வழி, நாடாளுமன்றத்தில் அவர்களின் குரல் ஒலிப்பதை உறுதி செய்ய முடியும்.
  7. மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின்வழி (எம்.ஐ.டி.ஏ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கப்படும் வரி விலக்கு மற்றும் சலுகைகளை மீண்டும் மீழாய்வு செய்ய வேண்டும். இதன்வழி, அவர்கள் முறையாக வரி செலுத்துவதை உறுதிசெய்ய முடியும்.
  8. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பெருஞ்சக்திகள் கொண்டுவரும் உலகத் தாராளமயக் கொள்கைகளுக்குச் சவால் கொடுக்க மலேசியா முயற்சிக்க வேண்டும். அதற்காக, ஆசியான் நாடுகளிடையேப் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் மலேசியா முன்னணி வகிப்பது அவசியம். இம்முயற்சியில், வளர்ச்சி கண்ட நாடுகள் மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகள் என இருபாலரின் நலனையும் முக்கியத்துவத்தையும் பாதுகாக்க ‘பண்டோங் கூட்டமைப்பு 1955’-யை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
  9. நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து ஆயுத கொள்முதல்களையும் நிறுத்த வேண்டும். தற்போது கொள்முதல் செய்யப்படும் அனைத்து ஆயுதங்களுக்கான தேவையை ஆய்வு செய்து, அதற்கேற்ப பாதுகாப்பு மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆயுத கொள்முதலுக்குப் பயன்படுத்தப்படும் பணத்தை மீதப்படுத்தி பிற அமைச்சரவைகளுக்கான அவசர மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்.
  10. பிராந்திய விரிவாக்க பொருளாதாரக் கூட்டமைப்பு (ஆர்.சி.இ.பி), திறந்த வாணிப ஒப்பந்தத்திலிருந்து மலேசியா விலக வேண்டும். ஆர்.சி.இ.பி வாணிப ஒப்பந்தத்தில் பங்கு பெறுவதற்கு முன்னர் உண்மையான செலவீனத்தின் இலாபம் மற்றும் மனித உரிமைகளுக்கு அதன்மூலம் உண்டாகும் விளைவு ஆகியவற்றை ஆராய வேண்டும். அனைத்து தடையற்ற வாணிப உடன்படிக்கைகளையும் மீண்டும் சரிபார்த்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். பின்னர், நமது பொருளாதாரம் மற்றும் மக்களின் நலன்களுக்குத் தகுந்த நன்மைகளை வழங்காத உடன்படிக்கைகள் அனைத்திலும் இருந்து விலக வேண்டும்.

மேலே கூறப்பட்ட பரிந்துரைகள் யாவும், இப்போதிருக்கும் அரசாங்கம் உண்மையில் பொது மக்களுக்கான அரசாங்கமா என்பதைத் முடிவு செய்ய நாம் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் ஆகும். மலேசியாவிலுள்ள வர்க்க அடிப்படையிலான சமூக-பொருளாதார பிரச்சினைகளை நன்கு ஆராயாததால் தங்களின் சீர்த்திருத்த பரிந்துரைகளிலிருந்து நம்பிக்கைக் கூட்டணி பின்வாங்கி வருவதாக பி.எஸ்.எம். கருதுகிறது.

இந்த உலகத் தாராளமயக் கொள்கையின் அழுத்தங்களைப்பற்றி நம்பிக்கைக் கூட்டணி புரிந்து கொள்ள முடியாவிட்டால், அவர்களால் எந்தச் சீர்த்திருத்தங்களையும் கொண்டு வர முடியாது, மேலும், அதன் பக்கத்தில் நின்று, சீர்திருத்தத்திற்கு எதிராக இயங்கும் நிலைக்கு ஆளாவர்.