மின்சுடலை, இடுகாடு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டும் – குணராஜ்!

சிலாங்கூர் மாநிலத்தில் இன்னமும் தீர்க்கப்படாத மின்சுடலை மற்றும் இடுகாடு பிரச்சனைகளுக்கு மாநில அரசு  தீர்வு காண வேண்டும் என்று செந்தோசா சட்ட மன்ற உறுப்பிணர் குணராஜ் நேற்று முன்தினம் சட்ட சபையில் முன்வைத்தார்.

மேன்மை  தங்கிய  சிலாங்கூர் சுல்தான் அவர்களின் உரை சார்பாக நன்றியுரை நிகழ்த்திய குணராஜ், இந்தப் பிரச்சனைகளுக்கு  தீர்வு காண ஓர் அரசியல் கடப்பாடு மாநில அரசின் வழி உருவாக வேண்டும் என்றார்.

2008 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் அரசாங்கம் தேசிய முன்னணி ஆட்சியில் இருந்து பாக்காத்தான் கூட்டணி ஆட்சிக்கு மாறியது. இந்த வருடம் நடந்த 14-வது பொது தேர்தலில் சட்ட மன்றத்தில் உள்ள 56 இடங்களில் 51 இடங்களை வென்ற நம்பிக்கை கூட்டணி சிலாங்கூர் மக்களின் மேம்பாட்டுக்கும் அத்தியாவசிய சேவைக்கும் முதன்மை அளிக்கும் என்ற நம்பிக்கையில் குணராஜ் அவர்களின் சட்டமன்ற உரை அமைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மக்கள் கூட்டணி இந்தியர்கள் எதிர்நோக்கும் மின்சுடலை மற்றும் இடுகாட்டு பிரச்சனைகளை முற்றாக தீர்க்கவில்லை. தேசிய முன்னணி மத்திய அரசாங்கமும் இதில் நாட்டம் காட்டி அதற்கான தீர்வுகளை எடுத்திருந்தது, இருப்பினும் இந்த பிரச்சனைகள் இன்னமும் தீர்ந்தபாடில்லை.

சிலாங்கூரில் உள்ள 12 நகராட்சி மற்றும் ஊராச்சிமன்றங்களில் கிள்ளான், சுபாங்ஜெயா மற்றும் பெட்டாலிங் ஜெயா மன்றங்களைத் தவிர்த்து மற்றவகைகளில் தகனம் செய்வதற்கான அரசாங்க மின்சுடலை கிடையாது.

நமது நாட்டின் உள்ளூர் அரசாங்க சட்டம் 1976 –இன்படி மின்சுடலை மற்றும் இடுகாட்டு பிரச்சனைகள் நகராட்சி மற்றும் ஊராச்சிமன்றங்களின் பொறுப்பாகும் என்கிறார் முன்னாள் சுபாங்ஜெயா கவுன்சிலர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இந்த சட்டத்தின் பகுதி 11  செக்சன் 9 (1), அந்த பொறுப்பை அவர்களிடம் விட்டு விடுகிறது.

குணராஜ் அவர்கள் தனது முதலாவது சட்ட சபை உரையிலேயே இந்திய சமூகத்தின் ஒரு நீண்ட கால சிக்கலை முன்வைத்துள்ளார். இவற்றுக்கான தீர்வுகளை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பூர்த்தி செய்ய அவர் தொடர் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக மலேசியைஇன்று-க்கு  கூறினார்.