நிவாரண முகாமில் பிறந்தநாள் கொண்டாடிய மம்முட்டி

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உடமைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. சேத மதிப்பு ரூ.2,500 கோடி இருக்கும் என்று அரசு மதிப்பிட்டு உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண உதவிகள் குவிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி முதல் அமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார். இந்த நிலையில் மம்முட்டி தனது 67–வது பிறந்தநாளையொட்டி பரவூரில் உள்ள வெள்ள நிவாரண முகாமுக்கு சென்றார்.

அங்கு தங்கி இருந்த மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் சென்று இருந்தனர். கணவரை இழந்த அஸ்ரிதா என்ற பெண் தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்ததாகவும் அந்த வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மம்முட்டியிடம் கூறப்பட்டது.

அவருக்கு சமூக சேவகர் ஒருவர் 4 சென்ட் நிலம் இலவசமாக கொடுக்க முன்வந்தார். அந்த இடத்தில் வீடு கட்டி கொடுப்பதற்கான செலவை மம்முட்டி ரசிகர் மன்றத்தினர் ஏற்றுக்கொண்டனர். மம்முட்டி கூறும்போது, ‘‘வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரளாவை மறுசீரமைப்பு செய்வதே இப்போதைய நமது நோக்கம். ஒருவருக்கு ஒருவர் உதவிகள் வழங்கி அதற்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

-https://www.dailythanthi.com