போர்ட் டிக்சன் எங்களிடமே இருக்கட்டும்: முன்னாள் படைவீரர் தரப்பு அன்வாரிடம் கோரிக்கை

முன்னாள் படைவீரர்கள் அமைப்பான பேட்ரியோட், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அன்வார் அங்கு போட்டியிடுவதை அத்தொகுதியில் உள்ள முன்னாள் படைவீரர்களும் இப்போது ஆயுதப்படைகளில் பணியாற்றுவோரும் விரும்ப மாட்டார்கள் என்றும் மீறிப் போட்டியிட்டால் அங்கு “பின்னடைவு” ஏற்படலாம் என்றும் அது கூறிற்று.

இப்போது அத்தொகுதி எம்பியாக இருக்கும் டேனியல் பாலகோபால் அப்துல்லா, அரச மலேசிய கடற்படையின் முன்னாள் உயர் அதிகாரி. “இராணுவ விவகாரங்கள் பற்றியும் முன்னாள் படைவீரர் நலன் பற்றியும் எடுத்துரைப்பதற்கு அவர் அங்கு இருப்பது முக்கியம்” என்று பெட்ரியோட் தலைவர் முகம்மட் அர்ஷாட் ராஜி கூறினார்.

“நாடாளுமன்றத்தில் ஆயுதப் படை உறுப்பினர் இருப்பதை ஆயிரக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ஆதரிக்கிறார்கள், அவரைத் தங்களின் பிரதிநிதியாகக் கருதும் அவர்கள், முன்னாள் படைவீரர் விவகாரங்களில் அவர் தங்களுக்காகக் குரல் கொடுப்பார் என்றும் நம்பி இருக்கிறார்கள்”, என அர்ஷாட் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.