இலங்கை: சிறுநீரகத்தை விற்று கடனை செலுத்த முயலும் பெண்கள்

இலங்கை போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுநீரகங்களை விற்று கடன்களை செலுத்த முயற்சிப்பதாக ஐ.நா நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை போரினால் பாதிக்கப்பட்டு கணவரை இழந்த விதவைகளும், போர் நடந்த பகுதிகளிலுள்ள பெண்களும் தங்களின் சிறப்பு கடன்களை திருப்பிச் செலுத்த சிறுநீரகங்களை (கிட்னிகளை) விற்க முயற்சித்த சம்பவங்களை அறிய வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஐநா நிபுணர்கடனை செலுத்த இலங்கை போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் முயற்சிக்கும் விவகாரத்தில் இலங்கை அரசு உடனடியாக தலையிட வேண்டும் – ஐநா நிபுணர்

இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என மனித உரிமைகளில் வெளிநாட்டு கடனின் பாதிப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்த சுயாதீன நிபுணர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 3ம் தேதி இலங்கைக்கு வந்த ஜூவான் பப்லோ ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடனை திரும்ப செலுத்த வழியின்றி தங்களது சிறுநீரகங்களை விற்பனை செய்ய முயற்சித்த சம்பவங்களை நான் கேள்வியுற்றேன்” என்று கூறிய அவர் இதுதொடர்பான மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

கோப்புப்படம்
கடன் பெற்ற பெண்கள் உளவியல், உடல் ரீதியான அத்துமீறல்களை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருக்கின்றனர் (கோப்புப்படம்)

”கடன் பெற்ற பெண்கள் உளவியல், உடல் ரீதியான அத்துமீறல்களை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருக்கின்றனர். தமது தவணையை செலுத்துவதற்கு பதிலாக ”பாலியல் சலுகைகளை” வழங்க நிர்ப்பந்திக்கப்படுவது குறித்து எனது கவனத்திற்கு வந்துள்ளது.

இலங்கையில் 37 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போரினால், ஆயிரக்கணக்கான பெண்கள் கணவரை இழந்துள்ளனர். போரில் கணவரை இழந்த பெண்களில் பலர் வாழ்க்கையை நடத்துவதற்கு சிறு கடன்களைப் பெற வேண்டியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் கடன் பெற்ற பெண்களில் சிலர், வடக்கில் நிலவி வரும் வறட்சியினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சிறு கடன் நிறுவனங்கள் இந்தப் பெண்களிடம் ஆண்டு வட்டியாக 220 சதவீதத்தை வசூலிக்கின்றன. 30 சதவீத வட்டியின் அடிப்படையில் கடன் பெற்றுக்கொண்டு திரும்ப செலுத்த முடியாத இரண்டு லட்சம் பெண்களின் கடன்களை இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அரசு தள்ளுபடி செய்துள்ளது.

பெண்களை போன்றே ஆண்கள் பெற்றுக்கொண்ட கடன்களையும் தள்ளுபடி செய்து, கடன் வழங்குவது தொடர்பாக கடுமையான சட்ட நியதிகள் அமுலாக்கப்பட வேண்டும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லஞ்ச ஊழலை ஒழிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை இலங்கை அரசு நிறுவியதற்கு பப்லோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பூர் மின் உற்பத்தி நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பிரம்மாண்ட உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர், இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக விரிவான மதிப்பீடுகளை செய்ய ஒரு வலுவான சட்டக் கட்டமைப்பை அமுல்படுத்துவது அவசியம் என ஜூவான் பப்லா சுட்டிக்காட்டினார்.

உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் கொடுத்த முக்கியத்துவத்தை மனித உரிமை விடயத்திற்குக் கொடுக்கவில்லை.

மனித உரிமை விடயங்களை மதிப்பீடு செய்ய சட்ட ஒழுங்குமுறைகளை நிரூபிக்கவில்லை. உட்கட்மைப்பு வசதிகளைவிட பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள், மனித உரிமை விடயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பவற்றை இலங்கை அரசாங்கம் மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” அவர் சுட்டிக்காட்டினார்.

ஜூவான் பப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி 2014ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளிநாட்டுக் கடனின் பாதிப்புகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணராக நியமனம் செய்யப்பட்டார்.

இதேவேளை, லஞ்ச ஊழலை ஒழிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை இலங்கை அரசாங்கம் நிறுவியமைக்கு பப்லோ பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுகடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று செலுத்த முடியாது போன மொத்த நிலுவைத் தொகை ஒன்பது பில்லியன் ரூபாய் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். -BBC_Tamil

TAGS: