மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்திய ரஷியா..

3 லட்சம் ராணுவ வீரர்கள், நவீன தளவாடங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக ரஷியா மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தியுள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் அதிபருக்கு ஆதரவாக போரிடும் ரஷியா கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகின்றது. போரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது நேரடியாக குற்றம் சாட்டி வருகின்றது.

உக்ரைன் நாட்டை உடைத்து, அதன் ஒரு பகுதியை தன்னுடன் இணைத்து கொண்டது. பிரிட்டனில் உளவாளிகள் மீது ரசாயன தாக்குதல் விவகாரம் ஆகியவற்றில் ரஷியா மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாகவே மோதி வருகின்றது. சமீபத்தில் டிரம்ப் – புதின் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள விவகாரங்கள் பேசி தீர்க்கப்பட்டாலும், பனிப்போர் அப்படியேதான் இருக்கிறது.

ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளும் இன்னும் நீங்க வில்லை. ஆனால், இதற்கெல்லாம் அசராத ரஷியா மேற்கு நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி வருகிறது.

சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள், 1000 போர் விமானங்கள், 900 டாங்கிகள் பங்கேற்கும் இந்த போர் ஒத்திகைக்கு “வோஸ்டாக்-2018” அல்லது “கிழக்கு-2018” என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய போர் ஒத்திகை 5 நாட்களுக்கு தொடர்ந்து நடக்க உள்ளது.

ராணுவ டாங்கிகள், விமானங்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ரஷியாவுடன் சீனா மற்றும் மங்கோலியா நாட்டு ராணுவமும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. சீனா 3200 ராணுவ வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது.

தங்களது எல்லை அருகே நேட்டோ மூலம் ஐரோப்பிய நாடுகள் அளவுக்கதிகமாக படை பலத்தைப் பெருக்கி வருவதாக ரஷியா குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்த நாடுகளின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், கடந்த 1981-ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் நடைபெற்ற ஸாபாட்-81 போர் ஒத்திகையைவிட அதிக எண்ணிக்கையில், தளவாடங்களும், போர் வீரர்களும் விஸ்டோக்-2018 இல் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஏறத்தாழ நிஜமான போருக்கு இணையான சூழலை ஏற்படுத்தி, இந்தப் போர் ஒத்திகை மேற்கொள்ளப்படும் என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு தெரிவித்திருந்தார். ரஷியா – சீனா இணையும் இந்த போர் ஒத்திகையை அமெரிக்கா கவனமாக பார்த்து வருகின்றது.

-athirvu.in