ஷாபி குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்

இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், பிரபல வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாமீது பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் பொய்யான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்ததாகவும் இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து பெற்ற ரிம9.5 மில்லியன் தொடர்பில் ஷாபிமீது இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இத்தொகை நஜிப்பின் வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு பகுதிகளாக ஷாபிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்குற்றச் செயல்கள் 2013 செப்டம்பர் 13இலும் 2014 பிப்ரவரி 17-இலும் நிகழ்ந்துள்ளன.

இதற்காக பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4(1)-இன்கீழ் அவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டது.அதில் ஷாபி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடின பட்சம் ஐந்தாண்டுச் சிறை அல்லது ரிம5 மில்லியன் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

ஷாபி, முன்குறிப்பிட்ட தொகை தொடர்பில் பொய்யான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்து வருமான வரிச் சட்டத்தை மீறியிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுச் சிறை அல்லது சம்பந்தப்பட்ட தொகையைப் போன்று ஐந்து மடங்கு அல்லது ரிம5 மில்லியன், இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படலாம்.

ஷாபி குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.