வழக்குரைஞர் ஷப்பி ரிம1 மில்லியன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்குரைஞரான முகம்மட் ஷப்பி அப்துல்லா மீது இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் இரு பணச் சலவைக் குற்றச்சாட்டுகள் மற்றும் இரு பொய்யான அறிக்கைகள் அளித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். இருவர் மற்றும் ரிம1 மில்லியன் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இக்குற்றங்களை அவர் செப்டெம்பர் 13, 2013 மற்றும் பெப்ரவரி 17, 2014 இல் புரிந்ததாக கூறப்படுகிறது.

அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், பணச் சலவை எதிர்ப்புச் சட்டம் 2001, செக்சன் 4 (1) (a)-இன் கீழ் அவருக்கு கூடினபட்சம் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை, ஐந்து மில்லியன் ரிங்கிட் வரையில் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வரிமான வரி இலாகாவிடம் தாக்கல் செய்திருந்த அறிக்கைகளில் நஜிப்பிடமிருந்து பெற்றிருந்த ரிம9.5 மில்லியனைக் குறிப்பிடாமல் இருந்த குற்றத்திற்காக வரிமான வரி சட்டம் 1967-இன் கீழ் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் சம்பந்தப்பட்டுள்ள தொகையின் மதிப்பில் ஐந்து மடங்கிற்குக் குறையாமல் அல்லது ரிம5 மில்லியன், இதில் எது அதிகமானதோ அது, விதிக்கப்படலாம்.

மேலும், ஷப்பி அவரது இரு கடப்பிதழ்களையும் ஒப்படைக்க வேண்டும், அதோடு, பிணை ரிம500,00 இன்று கட்ட வேண்டும். மீதியை செப்டெம்பர் 18 இல் கட்ட வேண்டும்.