“வெளியாள்கள்” ஜோகூர் இஸ்லாமிய விவகாரங்களில் சம்பந்தப்படக் கூடாது, சுல்தான் எச்சரிக்கை

 

ஜோகூர் இஸ்லாமிய விவகாரங்களிலிருந்து “வெளியாள்கள்” விலகி இருக்க வேண்டும் என்று ஜோகூர் சுல்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனென்றால் அது மாநிலச் சட்டங்கள் சம்பந்தப்பட்டதாகும்.

ஷரியா சட்டங்கள், சமயப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆட்சியாளர் சார்பில் மாநில அரசு முடிவு செய்யும் என்று ஜோகூரில் 100 ஆண்டுகால இஸ்லாமியக் கல்வி கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய சுல்தான் கூறினார்.

ஆகவே, அனைவரும் மாநில அரசு எடுத்த முடிவுகளை மதிக்க வேண்டும். வெளியாள்கள் தலையிடவோ கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவோ கூடாது, அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.

எனது அரசாங்கம் மாநிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் துணிவுடனும் திட நம்பிக்கையுடனும் நிலைநிறுத்தும் மற்றும் மாநில நலன்கள் மற்றும் பங்சா ஜோகூர் ஆகியவற்றை தற்காக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

“தலையிடுதல்” பற்றிய விபரங்கள் எதனையும் சுல்தான் அளிக்கவில்லை.

ஜோகூரில், தாபீஸ் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படுவதற்கு முன் அவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறிய சுல்தான், சட்டத்தை மீறும் எந்த ஒரு தாபீஸ் பள்ளியும் மூடப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.