பிகேஆரில் தேர்தல்

பிகேஆர் கட்சித் தேர்தல் இன்று தொடங்கியது. முதன்முதலாக கெடா, பினாங்கு உறுப்பினர்கள் காலை மணி 9க்கு வாக்களிக்கத் தொடங்கினர்.

பிகேஆரில் அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 5-இல் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, இப்போது அனைவரின் கவனமும் துணைத் தலைவர் பதவிமீது பதிந்துள்ளது.

துணைத் தலைவர் பதவி கொம்பாக் எம்பியும் பொருளாதார அமைச்சருமான அஸ்மின் அலிக்கும் பாண்டான் எம்பி ரபிசி ரம்லிக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமைந்துள்ளது.

இது தவிர உதவித் தலைவர்கள், இளைஞர் தலைவர், மகளிர் தலைவர் மத்திய தலைமைத்துவக் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல்களும் நடைபெறும்.

தொகுதி நிலைகளிலும் தேர்தல்கள் நடைபெறும்.

முதன்முதலாக மின் -வாக்களிப்பு முறை அறிமுகப்பட்டிருப்பதால் இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தேர்தலாக அமைகிறது.

பெர்லிஸ், பேராக்கில் செப்டம்பர் 23இலும், மலாக்காவில் செப். 29இலும், ஜோகூரில் செப்.30இலும், கிளந்தான், திரெங்கானுவில் அக்டோபர் 5இலும், பகாங்கில் அக். 6இலும், கூட்டரசுப் பிரதேசத்தில் அக்.7இலும், சிலாங்கூரில் அக்டோபர் 13, 14, 21இலும், நெகிரி செம்பிலானில் அக். 29இலும், சரவாக்கில், அக். 20, 21இலும், சாபாவில் அக். அக்.27, 28இலும் கட்சித் தேர்தல்கள் நடைபெறும்.

பினாங்கில் 13 தொகுதிகளில் 55, 132 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்றும் மாலை 6 மணி அளவில் முடிவுகள் தெரிய வரும் என்றும் பினாங்கு புகேஆர் தலைமைத்துவ மன்றச் செயலாளர் சுல்கிப்ளி சாஆட் கூறினார்.