இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு ஜே.பி. மோர்கன் மில்லியன் ரிங்கிட் நிதி உதவி

 

 

பள்ளியில் கல்வியைத் தொடராமல் விலகிவிடும் இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு  வழிகாட்டும் கடப்பாட்டைக் கொண்டிருக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு அமெரிக்க உலக வங்கி மற்றும் நிதி சேவைகள் வழங்கும் ஜே.பி. மோர்கன் ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி உதவி அளித்துள்ளது.

 

இந்த மானிய உடன்பாட்டைக் கொண்டாடும் நிகழ்ச்சி செப்டெம்பர் 21 இல், உலுசிலாங்கூர், களும்பாங்கில் 35 ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் மைஸ்கில் அறவாரியம் உருவாக்கியிருக்கும் அதன் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

 

மைஸ்கில் அறவாரியம் அளிக்கும் தொழில் திறன் பயிற்சியில் மனநிறைவு கொண்ட ஜே.பி. மோர்கன் மேலும் 300 வழியற்ற 14 மற்றும் 18 வயதிற்கிடையிலான இளைஞர்களுக்கு மின்சாரம், நீர்க்குழாய் மற்றும் குளிர்ச்சாதனம் ஆகியவை சம்பந்தப்பட்ட தொழில் திறன் பயிற்சிகளைப் பெற்று நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற 24 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு பயிற்சிகள் பெற இந்த நிதி உதவியை அளித்துள்ளது.

 

களும்பாங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜே.பி. மோகர்னின் மலேசியாவுக்கான மூத்த அதிகாரி ஸ்டீவ் கிளேடன், அவருடைய இதர சகாக்களுடன் கலந்துகொண்டார்.

 

இந்நாடு 2020 க்குள் உயர் வருமானம் பெறும் நாடாகத் தகுதி பெறும் நோக்கத்தைக் கொண்டுள்ளதால், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறைகளில் உயர் வருமானம் பெறுவதற்கு வகைசெய்யும் நோக்கத்துடன் இளைஞர்களுக்கு உதவும் கடப்பாட்டை தாங்கள் கொண்டிருப்பதாக ஸ்டீவ் இந்நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.

 

இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தைப் பேணுவதற்காக மட்டும் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 2016-2020க்கு இடையில் மலேசியாவில் 1.5 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தொழில் திறன் பயிற்சி (TVET)தேவைப்படுகிறது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு சரியான தொழில் திறன் இல்லாதிருப்பது கவலையளிப்பதாகக் கூறப்படுகிறது.

 

“ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வி பெறும் உரிமையைப் பெற்றிருக்கிறது”, என்று இந்நிகழ்ச்சியல் பேசிய மைஸ்கில் அறவாரியத்தில் தோற்றுநர் சி. பசுபதி கூறினார்.

 

இந்த நோக்கத்தை அடைய மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டுக் கல்வியை வழங்க மைஸ்கில் அறவாரியம் தீர்மானித்தது. அதற்கு தேவையான நிதியைப் பெற நாங்கள் தனியார் துறை மற்றும் அரசாங்கம் ஆகியவற்றை நாடினோம். இதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்த இலட்சியத்தை நோக்கி நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்று அவர் மேலும் கூறினார்.

 

ஜே.பி. மோர்கன் வழங்கியுள்ள நிதி உதவியைக் கொண்டு மைஸ்கில் அறவாரியம் அளிக்கும் தொழில் திறன் பயிற்சிகளின் வழி பெறும் அனுபவம் அதில் தேர்வுற்றவர்களுக்கு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று தாம் நம்புவதாக மைஸ்கில் அறவாரியத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி தேவசர்மா கெங்காதரன் தெரிவித்தார்.

 

புதிய அரசாங்கம் அதன் இந்தியர்களுக்கான சிறப்பு தேர்தல் வாக்குறுதி எண் 8-இன் கீழ் மைஸ்கில் அறவாரியத்திற்கு உதவுமா?

 

மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்னர், பக்கத்தான் ஹரப்பான் இந்நாட்டு இந்தியர்களுக்கு 25 சிறப்பு வாக்குறுதிகளை அதன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது.

 

அதில் வாக்குறுதி 8 இவ்வாறு கூறுகிறது: “நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாடுகளிலும் இந்திய மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றுப் பயனடையும் வண்ணம், தொழிற்திறன், தொழில்நுட்ப வேலைகளுக்கான முன்னனுபவப் பயிற்சிகளும் பட்டறைகளில் வாய்ப்புகளும் வழங்கி, அவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதை உறுதிசெய்தல்.”

 

இந்த வாக்குறுதியில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் மைஸ்கில் அறவாரியம் அதன் சொந்த முயற்சியில் மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிக்கு மேலும் வலுவூட்ட புதிய பக்கத்தான் அரசாங்கம் இதுவரையில் ஏதேனும் செய்துள்ளதா என்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய பக்கத்தான் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியோவிடம் கேட்கப்பட்டது.

 

அதற்குப் பதில் அளித்த ஜூன், நான் இதற்கு ஆதரவாக ஒரு விளம்பரம் செய்வேன் என்றார்.

 

என்ன விளம்பரம் செய்யப் போகிறீர்கள் என்ற அடுத்த கேள்விக்கு, இந்த பிரச்சனையை பெடரல் அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சுக்கு எடுத்துச் செல்வேன் என்று கூறினார்.

 

தேர்தல் வாக்குறுதி அளித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இதில் ஏன் இவ்வளவு அக்கறையின்மை?

 

இதற்குப் பதில் அளித்த ஜூன், நான் இந்தப் பிரச்சைனை என்னால் முடிந்த போது எடுத்துச் செல்வேன். நான் இதை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பேன் என்று அவர் இறுதியாக கூறினார்.