மதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றம்!: பயனீட்டாளர் நல அமைச்சகம் எதற்காக?

கோலாலம்பூர், செப்.23:. கடந்த ஒரு வாரமாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை அனைத்து மதுபானங்களுக்கும் விலை ஏற்றப்பட்டு வருகின்றன. விஷ மதுவை அருந்தியதன் காரணமாக மரணம் அடைந்தோரின் எண்ணிக்கையும் சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மதுப் பயனீட்டாளர்கள் மலிவு விலை மதுவைக் கண்டு பயந்து.., அவற்றைப் புறக்கணித்து  சீமைச் சரக்கு என்றும் உயர் ரக மது என்றும் சொல்லப்படும் பிராண்டி, விஸ்கி, ரம், ஜின், ஒய்ன், பியர் என்னும் மதுபானங்களை நாட ஆரம்பித்துள்ளனர்.

இதுதான் சமயம் என்று இந்த தரமான மது வகைப் பானங்களின் விலை, வகை தொகையின்றி ஏற்றப்படுகின்றன. பொதுமக்களைப் பற்றியோ அல்லது மது பயனீட்டாளர்களைப் பற்றியோ கவலைப்படாமல் கொள்ளை இலாபம் ஒன்றையே இலக்காகக் கொண்டு வெள்ளித் தாளுக்கு ஆலாய்ப் பறக்கும் இந்த சமூக விரோதியருக்கு எங்கிருந்து இப்படிப்பட்ட துணிவு வருகிறது என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.

மளிகைக்கடை, பலசரக்கு பண்டக சாலை, ‘மினி மார்க்கெட்’, ‘செவன்-இலெவன்’ கடைகள், ‘ஸ்பீட் மார்ட் 99’ கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் செப்டம்பர் 17-க்குப் பின் மதுபானங்களின் விலை ஏற்றப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு வாணிகம், பயனீட்டாளர் நலத்துறை என்ற ஒன்று இருக்கிறதா அல்லது அந்தத்துறை எதற்காக என்பதே விளங்கவில்லை. ஏற்கெனவே மதுவின் விலை அதிகம் என்பதால்தான் மது மயக்கப் பித்து பிடித்தவர்கள் எதையாவது குடித்துத் தொலைக்க வேண்டும் என்பதற்காக மட்டமான அல்லது மலிவான சம்சு, எரிசாராயம் போன்ற மது பானங்களை, அவை உடலை அரித்து உயிரைப் பறிக்கும் நச்சு பானங்கள் எனத் தெரிந்தும் நாடுகின்றனர். பெரும்பாலும் அடித்தட்டு மக்கள் அல்லது பாட்டாளிப் பெருமக்கள் அல்லது குறைந்த வருமானம் பெறுவோர்தான் இப்படிப்பட்டவர்கள்.

உடல் உழைப்புத் தொழிலாளியரா வெளிநாட்டினரா அல்லது ஏழை மக்களா என்பது பொருட்டல்ல; அனைத்து மக்களுக்குமான உயிர் என்பது சமம்தான்.

இந்த சூழ்நிலையில் உயிரைப் பறிக்கும் இரசாயக் கலவை அதிகமாகக் கொண்ட மதுவகை சந்தைக்கும் பரிவர்த்தனைக்கும் எப்படி வருகின்றன?

அண்மைய ஆண்டுகளாக ஒரேக் கடைவீதியில் இரண்டு மூன்று மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கிய நிலை மாறி, தற்பொழுது குடியிறுப்புப் பகுதிகளிலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டு அவை காலை முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கின்றன. வார விடுமுறை அல்லது பொதுவிடுமுறை நாட்களில் அடுத்த நாள் விடியற்காலை வரைகூட மதுக்கடைகள் திறந்துள்ளன. இப்படிப்பட்ட உரிமையையும் உரிமத்தையும் அளிக்கும் அமலாக்கப் பிரிவினர் எங்கிருக்கின்றனர்?

உள்ளபடியே மக்கள் நலத்தில் அரசுக்கு அக்கறை இருந்தால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை. கடந்த ஆட்சியில் எப்படியோ அப்படித்தான் இந்த ஆட்சியிலும் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் நலத்துறையின் அமலாக்கத் துறையினர் இருக்கின்றனர் என்று பொதுமக்கள் நேரடியாகவேப் பேசுகின்றனர்.

கடந்த ஆட்சியில் எப்பொழுதெல்லாம் பிரிம் உதவித் தொகை வழங்கப்பட்டதோ அப்பொழுதெல்லாம் பொருட்களின் விலையும் ஏற்றப்பட்டன. மது பானங்களும் அதற்கு விலக்கு அல்ல; வியாபாரிகள் என்றாலே எல்லோருக்கும் சிந்தனை ஒன்றுதான். இந்த ஆண்டில் இரண்டாவது தவணையாக நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் முதல் முறையாக பிரிம் உதவித் தொகை அளிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பொருள் விலை அந்த அளவிற்கு உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1981-ஆம் ஆண்டில் கெடா, லூனாஸ் பட்டணத்திற்கு அருகில் உள்ள தோட்டப் புறத்தில் நஞ்சு கலந்த மதுவை அருந்தி அதிகமான தோட்டப் பாட்டாளி மக்கள் மடிந்ததற்குப் பின் தற்பொழுது இப்படிப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி வருகிறது.

எனவே, இனியாவது மத்தியக் கூட்டரசு-மாநில அரசாங்கங்களுடன் மாநகர் மன்றங்கள், மாவட்ட மன்றங்கள், உள்ளாட்சி மன்றங்கள் என அனைத்துத் தரப்பாரும்  ஒன்றிணைந்து இந்த மது விடயத்தில் அக்கறையோடும் பொதுமக்களின் நலமான வாழ்வைக் கருத்தில் கொண்டும் செயல்பட்டால், அது சமுதாயத்திற்கு நன்மையாக அமையும்.

-நக்கீரன்