மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு

கோழிக்கோடு: சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.

கடுமையான பாகுபாடு

கேரளாவில் செயல்பட்டு வரும் முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா என்பவர் இது குறித்து கூறியதாவது:

கேரளாவில் உள்ள மசூதிகளில் பெண்களுக்கு கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம். நபிகள் நாயகத்தை பின்பற்றும் எந்த ஒரு முஸ்லிமும் பெண்களை ஓரம் கட்ட முடியாது. இப்பிரச்னையில், பிற மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டவர்களின் மத சுதந்திரத்தை காப்பாற்ற தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

தீண்டாமை கடைப்பிடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. அந்த வகையில், சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு வரவேற்க தக்கது. கொடூர பழக்க வழக்கங்களான நரபலி, உடன்கட்டை ஏறுதல், தேவதாசி போன்றவற்றுக்கு தடை விதித்தது போல, சபரிமலை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: