இரு குழந்தைகளின் ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது

 

இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இரு குழந்தைகள் – ஒரு பத்து வயது பெண் மற்றும் ஒரு ஐந்து வயது ஆண் – ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டதை இரத்து செய்தது.

இந்த விவகாரத்தில் தாம் பெடரல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டிருப்பதாக நீதிபதி அஸிசா நவாவி தமது தீர்ப்பில் கூறினார்.

அந்தக் குழந்தைகளைப் பதிவு செய்வதற்கான முடிவை இரத்து செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது என்று அவர் கூறினார்.

அக்குழந்தைகள் ஒருதலைப்பட்சமாக அவர்களின் தாயாரால் மதம் மாற்றம் செய்யப்பட்டனரா என்பதில் கருத்துவேறுபாடு இல்லை என்றும் நீதிபதி கூறினார்.

மேலும், அவரது முடிவைத் தள்ளிப் போடுவதற்கு கூட்டரசுப் பிரதேச முல்லாப் பதிவாளரின் வழக்குரைஞர் விடுத்த வேண்டுகோளையும் நீதிபதி நிராகரித்தார்.

நீதிபதி அஸிசா அவரது தீர்ப்பில் ஒரு குறிப்பிட்ட பெடரல் உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறாவிட்டாலும், அவர் எம் இந்திரா காந்தி வழக்கின் தீர்ப்பைக் குறிப்பிடுகிறார் என்று நம்பப்படுகிறது – அத்தீர்ப்பு சிவில் திருமணத்தின் கீழ் பிறந்த குழந்தைகளின் மத மாற்றத்திற்கு இரு பெற்றோர்களின் ஒப்புதல் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.