ஐயே…!  மெத்த  கடினம்

  • கி.சீலதாஸ், அக்டோபர் 17, 2018.

 

“கோழி  மேய்ச்சாலும்  கும்பினியில்  மேய்க்கணும்”  என்ற  கிராமிய  மொழி,  ஆங்கிலேயர்களின்  ஆட்சி  எப்பொழுது  இந்தியத்  துணைக்கண்டத்தில்  கால்  ஊன்றியதோ  அன்றிலிருந்து  வழங்கி வந்தது.  இதன்  பொருள்  என்ன?  கிழக்கிந்தியக்  கம்பெனி  இந்தியத்  துணைக்கண்டத்தின்   பலநாடுகளை  தன்  ஆதிக்கத்தினுள்  கொண்டுவந்தது.  அவ்வாறு  ஆக்கிரமிக்கப்பட்ட  நாடுகளில்  இருந்து  மலிவான  ஊதியத்துக்கு  தொழிலாளர்கள்  கிடைத்தார்கள்.  கிழக்கிந்தியக்  கம்பெனியின்  ஆதிக்கம்  இந்தியாவையும்  தாண்டி  வேறு  பல  நாடுகளிலும்   பரவியது.  அங்கெல்லாம்  தென்னிந்தியத்  தொழிலாளர்களுக்கு  வேலை  வாய்ப்பு  கொடுக்கப்பட்டது.  அந்த  நிறுவனத்தில்  வேலைக்கு  அமர்ந்தால்  பொருளாதார  பாதுகாப்பு  நிச்சயமாக  இருக்கும்  என்பதை  உறுதிப்படுத்துவதுதான்  இந்த  “கோழி  மேய்ச்சாலும்  கும்பனியில்  மேய்க்கணும்”  என்ற  கிராமியமொழி.

தென்னிந்தியர்கள்,  அதிலும்  குறிப்பாகத்  தமிழர்கள்,  ஆங்கிலேயன்  மீது  வைத்திருந்த  நம்பிக்கை  அசைக்க  முடியாததாக  இருந்தது.  அவன்  மனம் கோணாதபடி  நடந்துகொண்டார்கள்  என்பது  வரலாற்று  உண்மை.  அவர்களைக்  கடவுளா  நினைத்து,  நம்பி  வாழ்ந்தார்கள்

ஆங்கிலேயரளின்  ஒட்டுமொத்த  கட்டுப்பாட்டிற்கு  உட்பட்ட  தமிழ்ச்  சமுதாயத்தைச்  சித்தரிக்கும்  மற்றோரு  கிராமியப்  பாடல்  உண்டு,

ஊரான்  ஊரான்  தோட்டத்திலே

ஒருத்தன்  போட்டானாம்  வெள்ளரிக்கா

அதை  காசுக்கு  ரெண்டு  விற்கச்  சொல்லி

காகிதம்  போட்டானாம்  வெள்ளைக்காரன்.

யாருடைய  தோட்டம்?  யாருக்கோ  சொந்தமானது.  வெள்ளைக்காரனுக்கு  எந்தத்  தொடர்பும்  இல்லை.  வெள்ளிரிக்காயை  நட்டவன்  ஒருத்தன்.  அதை  விற்கச்  சொல்லுகிறான்  சீமையில்  வாழ்கின்ற  வெள்ளைக்காரன்.  வெள்ளைக்காரன்  தமிழனின்  பொருளாதாரத்தை  மட்டும் கட்டுப்படுத்தவில்லை.  அவனுடைய  வாழ்வின்  விதியையே  கட்டுப்படுத்தினான்.  அவனின்  சமயத்தைச்  சேர்ந்த  போதகர்கள்  வந்தார்கள்,  தமிழர்களின்  வாழ்க்கை  முறை,  பணிந்து  போகும்  பண்பு,  இறை  நம்பிக்கை  யாவும்  அவர்களைச்  சிந்திக்க  வைத்தன.  தமிழர்களின்  மொழியைக்  கற்றார்கள்.  இலக்கியத்தைக்  கற்றார்கள். தமிழர்களின்  வரலாற்றையே  திரித்துக்  கூறினார்கள்.  வெள்ளைக்காரர்கள்  எழுதியதை  நம்பும்  பக்குவத்தை  அடைந்தார்கள்  தமிழர்கள்.  அந்த  நம்பிக்கையில்  இருந்து  இன்னும்  விடுதலைப்  பெறாத  சமுதாயத்தைத்தான்   இன்றும்  காண்கிறோம்.

தமிழர்களின்   பொருளாதர  வாழ்க்கையை  சீர்படுத்துவதாகச்    சொன்ன   வெள்ளைக்காரன்  அவர்கள்   அடிமை  மனதுடன்  வாழவேண்டும்  என்பதை  நிர்ணயித்தான்.  அதை  அமல்படுத்தினான்.

இந்த  நாட்டில்  ரப்பர்  தோட்டங்கள்  உருவாக்கப்பட்ட   காலம்,  உழைப்பிற்காகத்   தமிழர்கள் கொண்டுவரப்பட்டார்கள்.  அவ்வாறு  கொண்டுவரப்பட்டத்  தொழிலாளர்களுக்குத்  தோட்டத்திலேயே  தங்குமிடம்,  கள்ளுக்கடை,  கோயில்,  பள்ளிக்கூடம்  போன்ற  வசதிகள்  செய்து  கொடுக்கப்பட்டன.  இவ்வாறு  கொண்டுவரப்பட்டத்  தமிழர்கள் தங்களின்  ஒப்பந்த  காலம்  முடிந்ததும்  தாயகத்திற்கு  திரும்பினார்கள்.  இரை தேடி  வந்த  பறவைகள்  மீண்டும்  தங்களின்  நிரந்தரமான  கூட்டிற்குத்  திரும்பிவிடுவது  போல்  அமைந்திருந்தது  அவர்களின்  வாழ்க்கை.

காலனித்துவ  ஆங்கிலேயர்களால்  கொண்டுவரப்பட்டவர்கள்  எந்தப்  பாதுகாப்பும்  இன்றி  வாழ்ந்தார்கள்.  அவர்களைப்  போலவே  இந்நாட்டில்  குடியேறிய  சீன  சமூகம்  தனது  உரிமைகளைப்  பாதுகாக்க  சீன  அதிகாரிகளைக்  கொண்டிருந்தனர்.  ஆனால்,  தமிழ்த் தொழிலாளர்களுக்கு  ஆங்கிலேயனே  அவர்களின்  பாதுகாப்பு  அதிகாரியாக  இருந்தான்.  [காண்க: கே.ஏ.நீலகண்ட  ஐயர்  எழுதிய ‘மலாயாவில்  இந்தியர்களின்  பிரச்சினை’]  ஏன்?  தமிழன்  தமிழனையே  நம்பவில்லை – வெள்ளைக்காரனை  நம்பினான்.  அவனே  கடவுள்  என்று  தொடர்ந்து  நம்புவோரும்  உண்டு.  இப்படிப்பட்ட  மனோபாவம்  தமிழர்களிடையே  நிலைத்துவிட்டது  என்றால்  ஆச்சரியமாக  இருக்கிறதா?  இந்த  மனப்போக்கை  மறுப்பார்கள்  ஆனால்,  நன்கு  சிந்தித்துப்  பாருங்கள் –  ஆங்கிலேயனை  முழுக்க  முழுக்க  நம்பியவர்கள்   எதை  அடிப்படையாக  வைத்து  அவ்வாறு  நடந்துகொண்டார்கள்?  பிழைப்புக்கு    வழிகாட்டினானே  அதுதான்  முக்கியம்.  அவன்  கைவிடமாட்டான்.  அவன்  நம்மை  பாதுகாப்பான்  என்ற  உணர்வு.  அதே  உணர்வுதான்  இன்று,  சுதந்திரம்  அடைந்துவிட்டோம் என்று  உரக்கப்பாடும்  போது,  நமது  சாதாரண  வாழ்விற்கு  உத்திரவாதம்  தருவோரைக்  கடவுள்  என  போற்றி,  அவர்களை  வழிபடுவது, ஒருகாலத்தில்  வெள்ளைக்காரனுக்குக்  காட்டிய  நன்றிகடன்  இன்றும்  நீடிக்கிறது.  எப்படி  என்று  கேட்கிறீர்களா?  அரசு  தரும்  சில  மானியங்கள்,  இதன்  விளைவு  என்ன?  சிந்திக்கத்  தயங்கும்  சமுதாயமாக,  கோழி  மேய்ச்சாலும்  கும்பினியில்  மேய்க்கணும்  என்ற  ஊறிப்போன  பழக்கமானது  எப்படிப்பட்ட  இழிவு  நிலைக்குத்  தள்ளப்பட்டாலும்  பாதுகாப்பு  கிடைக்கும்  என்று  ஏங்கி  நிற்கும்   சமுதாயம்,  தமிழ்ச்  சமுதாயம்  என்றால்    இதற்கு  யார்  காரணம்?  அடிமை   மனநிலைதான்  காரணம்.

தோட்ட  வாழ்க்கையில்  காலங்காலமாகப்  பழக்கப்பட்டுப் போனவர்கள்  சுதந்திர  காலத்து  சவால்கள்  என்ன  என்பதை  சரியாகப்  புரிந்துகொள்ளாமல்,  பழைய  நிலையை  விட்டு  விலக  மறுக்கிறார்கள்  என்பது  வெள்ளிடைமலை.

தோட்டத்தில்  இருந்து  வெளியே  வந்தவர்கள்  பலர்  முன்னேற்றம்  கண்டுள்ளனர்.  தமிழர்  என்ற  நான்கு  சுவருக்குள்  தங்களையே  அடைத்துக்  கொள்ளாமல்  பிற  இனத்தவர்களோடு  கலந்து,  பண்போடு  பழகி,  அவர்களின்  நன்மதிப்பைப்  பெற்று  முன்னேறினார்கள்.  அதுதான்  நாம்  தெரிந்து  கொள்ள  வேண்டிய  இரகசியம்.

நான்  தோட்டத்திலிருந்து  வந்தவன்  என்ற   பழைய  பல்லவியை  நிறுத்திவிட்டு    பிறறோடு  சமமாக  நிற்கும்  திராணி   உண்டு  என்று  எப்பொழுது  நாம்  சொல்கிறோமோ  அப்பொழுதுதான்  நாம்  உண்மையான  முன்னேற்றத்தைக்  கண்டோம்  என்று  துணிந்து  சொல்லலாம்.

பழங்காலத்துப்  பெருமை  நாகரிகம்,  மொழிச்  சிறப்பு  யாவும்  பெருமைத்  தரக்  கூடியவைகள்தான்.  ஆனால்  அவை  மட்டும்  இக்கால  வாழ்க்கைக்கு  உதவும்  கருவிகள்  என்று  நம்புவது  வெள்ளைக்காரன்  அனுபவம்  இன்னும்  மாறவில்லை  என்றுதான்  சொல்லவேண்டும்.

தமிழர்களின்  இன்றைய  நிலையை  ஆராய்ந்து  பார்க்கும்பொழுது  கவிச்சக்கரவர்த்தி  சுப்பரமணிய  பாரதியின்:

என்று  தனியும்   இந்தச்  சுதந்திர  தாகம்?

என்று  மடியும்  எங்கள்  அடிமையின்  மோகம்?

என்ற  அவரின்  பாடலைப்  பாடுவதா  அல்லது  இறைவனைப்  பார்த்து  பக்தி  பரவசத்தோடு  நந்தனார்  பாடிய:

ஐயே,  மெத்த  கடினம்

உமது  அடிமை,

மெத்த  கடினம்.

என்று  பாடுவதா?  நந்தனார்  இறைவன்  மீது  உள்ள  பக்தியால்  பாடினார்.  ஆனால்,  தமிழனின்  நிலையோ  பாரதியார்  சொன்னது  போல்  அடிமை  மோகத்தோடு  வாழ்கிறான்.  எனவே,  இந்த  சூழ்நிலையை  கிரகிக்க  முயல்வது  மெத்த  கடினம்தான்!