திரளும் மக்கள் கூட்டம்… திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்

சென்னை: கமல்ஹாசன் மேற்கொண்டு வரும் சூறாவளி சுற்றுப்பயணங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவதை அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

அரசியல்வாதிகளின் மக்கள் விரோத செயல்களால் பல்வேறு நடிகர்கள் கட்சி தொடங்க ஆரம்பித்துள்ளனர். இதில் யாரும் எதிர்பாராமல் அரசியலில் குதித்தவர் கமல்தான். கட்சி தொடங்கிய கையோடு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருபவர் கமல்ஹாசன்.

இவரது சுற்றுப்பயணங்களில் பெரும்பாலும் மக்கள் நல திட்டங்களையே முன்னெடுத்து பேசி வருகிறார். கமல் கட்சி 2 அல்லது 3 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று தமிழக அமைச்சர்கள் விமர்சனம் செய்தனர். எனினும் அதுகுறித்து கவலைப்படாமல் கமல் தனது பணியை செவ்வனே செய்து வருகிறார்.

இரண்டாம் பட்சம்

அதிமுக, திமுகவை தாண்டி தமிழக மக்கள் ஏதாவது ஒரு மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது கமலின் பிரசார கூட்டங்களுக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதை பார்த்தாலே கண்கூடாக தெரிகிறது. கமல் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பது இரண்டாம்பட்சம்தான். ஆனாலும் அவரது பேச்சை கேட்க மக்கள் கூடுகின்றனர் என்பதுதான் விஷயம்.

பட்டியல்

அவரது செயல்பாடுகளை அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பதற்கான முழு காரணம் மற்ற அரசியல்வாதியை போல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களை தேடி வராமல் முன்கூட்டியே அந்த தொகுதிகளில் மக்களின் குறைகள் என்ன, எந்த திட்டங்களை அவர்கள் காலம் காலமாக எதிர்நோக்கியுள்ளனர் என்பதை பட்டியலிட்டு வருகிறார் கமல். இதுதான் அவர் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டத்தை சேர்த்து வருகிறது.

உத்தரமேரூர்

மேலும் எந்த ஒரு அரசியல்வாதியும் முன்னெடுக்காத கிராம சபை என்ற விஷயத்தை வற்புறுத்திவருகிறார் கமல். அதுவும் எங்கிருந்து குடவோலை முறை முதல் முறையாக கொண்டு வரப்பட்ட உத்தரமேரூரில் இருந்து… கிராம சபை கூட்டங்களை நடத்தினால்தான் மக்கள் குறைகள் என்னவென்று அதிகாரிகளுக்கு தெரியவரும். தமிழக அரசுக்கு எதிராக அவ்வப்போது அச்சமின்றி தன் தரப்பு கருத்துகளையும் முன்னெடுத்து வருகிறார். அதிமுகவுடன் கூட்டணிக்கு கமல் செல்லமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று நேரலை நிகழ்ச்சியில் மக்கள் முன்பே சொல்லிவிட்டார்.

விஜயகாந்த்

எனவே பதவி, பணத்துக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு கமல் செயல்பட்டால் மக்கள் மனதில் இடம் உண்டு, இல்லாவிட்டால் அவரது கட்சியும் விஜயகாந்த் கட்சி போல் மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக மற்ற கட்சிகளை மாறி மாறி குறை கூறும் போக்கை கடைப்பிடிக்காமல் தான் என்ன செய்வேன் என்பதை மட்டும் கமல் பேசுவதோடு வெற்றி பெறாவிட்டால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே சால சிறந்தது.

tamil.oneindia.com

TAGS: