தேர்வுக் குழு மீது நஜிப் முரண்பாடான அறிக்கைகளை விடுத்தாரா ?

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேர்தல் சீர்திருத்தம் மீது நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்கப் போவதாக  அறிவித்த பின்னர் ஏற்பட்ட நல்லெண்ணம் ஏன் ஒரு வாரத்துக்குள் காணாமல் போனது?

அந்தக் குழு தெரிவிக்கும் யோசனைகள் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்படும் என்பதற்கு பிரதமர் உத்தரவாதம் அளிக்க முடியுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகும்.

அடுத்த பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என்றும் குழுவின் பணிகள் அதனைக் கட்டுப்படுத்தாது என்றும் கடந்த வெள்ளிக்கிழமை அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நஜிப் கூறினார்.

ஆனால் அதற்கு முன்பு ஆகஸ்ட் 15ம் தேதி நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படும் என்ற தகவலை அறிவித்த பிரதமர், சீர்திருத்தங்கள் “வரும் பொதுத் தேர்தலை” நோக்கமாகக் கொண்டவை எனக் குறிப்பிட்டார்.

மலேசியாகினி அன்று அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வெளியிடுகிறது:

“அரசாங்கம் தில்லுமுல்லு செய்கிறது என்ற சந்தேகங்களுக்கு இடமின்றி வரும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நாம் இணக்கம் காணும் வகையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை நாடாளுமன்றத் தேர்வுக் குழு விவாதிக்கும்.”

(“Parliamentary select committee ini akan membincangkan segala-gala electoral reform yang perlu kita lakukan supaya kita akan dapat kata sepakat untuk mengendalikan pilihanraya akan datang tanpa sebarang rasa syak wasangka bahawa ada sesuatu manipulasi yang dilakukan oleh kerajaan.”)

பிரதமர் பின் வாங்கியிருப்பது பல தரப்புக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தேர்வுக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை முதலில் வரவேற்ற தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 2.0, அடுத்த பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நஜிப் நாடாளுமன்றத்தைக் கலைத்தால் அந்தத் தேர்வுக் குழு அமைக்கப்படுவதில் எந்தப் பயனும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் எதிர்க்கட்சிகள் அது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளன. உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக் குழு குறித்து தொடக்கத்தில் ஆதரவு தெரிவித்த டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அதனை இப்போது வெறும் “நாடகம்” என்கிறார்.

அந்தக் குழுவில் தாம் பங்கு பெறாமல் போகக் கூடிய சாத்தியம் இருப்பதாக பாஸ் கட்சியும் தெரிவித்துள்ளது. பிரதமருடைய அறிக்கை “அகங்காரமானது ” என்றும் வருணித்தது.