வங்காளதேசத்தில் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்..

டாக்கா: வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஓட்டலில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவியான தாரிஷி ஜெயின் உள்பட 20 வெளிநாட்டினர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

மீட்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே வங்காளதேசத்தில் இயங்கிவரும் ஜமாயத்துல் முஜாஹிதீன் என்ற உள்நாட்டு பயங்ரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பின்னர் தெரியவந்தது.

தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளை ராணுவத்தினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜமாயத்துல் முஜாஹிதீன் பயங்ரவாத அமைப்பின் தலைவரான ஷமில் (எ) கோர்ஷெட் ஆலம் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, நேற்றிரவு அப்பகுதியை முற்றுகையிட்ட போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் சூழ்ந்து கொண்டதை கண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் கோர்ஷெட் ஆலம் பிடிபட்டார். அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

பிடிபட்ட பயங்கரவாதிகள் தலைவரையும், காயமடைந்த இரு போலீசாரையும் அருகாமையில் உள்ள ஷாஹித் ரஹ்மான் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். போகும் வழியில் கோர்ஷெட் ஆலம் உயிரிழந்ததாக வங்காளதேசம் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டு வருகின்றன.

-athirvu.in