யூ.கே.எம். ஏற்பாட்டிலான ‘இந்தியர்கள் இடம்பெயர்வு கருத்தரங்’கிற்குக் கண்டனம்

இந்திய சமூகம் மலாயாவிற்கு இடம்பெயர்ந்தது தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தரங்கை ஏற்பாடு செய்த, மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தைச் (யூ.கே.எம்.) சிறுபான்மையினர் உரிமைகள் நடவடிக்கைக் கட்சி (மீரா) விமர்சித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 14-ம் தேதி, புதன்கிழமை, ‘தீபகற்ப மலேசியாவில் இந்திய சமூகம்: புலம்பெயர்வா அல்லது குடியேற்றமா? என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது யூ.கே.எம். இயற்கை மற்றும் மலாய் நாகரிக நிறுவனத்தின் (ஆத்மா) தொடர் அறிவுசார் உரையாடலின் ஒரு பகுதியாகும்.

இந்நிகழ்ச்சியில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, சர்வதேசக் கொள்கை ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பேராசிரியர் அஹ்மட் முராட் மெரிகன் மற்றும் தொல்பொருள் ஆராட்சியாளர் நஷா ரொட்ஜியாடி காவ்; ஆத்மா பேராசிரியர் ஜூலிஸ்கண்டார் ரம்லி; அறிவியல் & சமூக அறிவியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய நாகரிகப் பேராசிரியர், அசாருதின் முகமது தலி ஆகிய நான்கு ஆய்வாளர்கள் பேசவுள்ளனர்.

‘மீரா’ துணைத் தலைவர் எஸ். கோபி கிருஷ்ணன், புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகமான யூ.கே.எம்., இந்திய சமூகத்தைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற ‘கருத்தரங்கை’ ஏற்பாடு செய்வது ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்தார்.

யூ.கே.எம். இதனை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் என்ன? அதில் ஏன் வேறு இனத்தவர் யாரும் இடம்பெறவில்லை? என்று அறிய விரும்புவதாகவும் நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை, கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் மற்றும் ஒற்றுமைத் துறை அமைச்சர் பொ வேதமூர்த்தி ஆகியோர் ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கருத்தரங்கம் நிறுத்தப்படாமல் தொடருமானால், அதில் தவறான விஷயங்கள் பேசப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, ‘மிரா’ அதில் கலந்துகொள்ளும் என்றும் கோபி கூறினார்.