பிஎன் எம்பி அரசாங்கத் திட்டப் பணிகளில் கமிஷன் வாங்கியே ‘மில்லியன் கணக்கில் சம்பாதித்தாராம்’

முந்தைய நிர்வாகத்தில் ரிம3 பில்லியன் மதிப்புள்ள அரசாங்கத் திட்டப் பணிகளில் கமிஷன் பெற்றதன் மூலமாகவே மில்லியன் கணக்கில் சம்பாதித்ததாகக் கூறப்படும் எம்பி ஒருவரை எம்ஏசிசி விசாரணை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்துள்ள ஒரு செய்தி, டத்தோஸ்ரீ பட்டத்தைக் கொண்டிருந்த அம்மனிதர் பல அரசாங்கத் திட்டங்களில் இடைத்தரகராக பணியாற்றி ஒவ்வொரு திட்டத்திலும் எட்டிலிருந்து பத்து விழுக்காடுவரை கமிஷன் பெற்று “மில்லியன் கணக்கில் சம்பாதித்தார்” என்று கூறியது.

அவர் பிஎன் அரசாங்கத்தில் பதவி எதுவும் வகிக்கவில்லை.

அத்திட்டங்கள் பற்றி விசாரிக்கவே எம்ஏசிசி நேற்று முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அழைத்திருந்ததாகவும் அச்செய்தி தெரிவித்தது.

2015-இலிருந்து மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்வரை விசாரிக்கப்படுவதாக தெரிகிறது.

அத்திட்டங்களில் ரிம100 மில்லியனில் சுகாதார அமைச்சுக்கு மருத்துவ ஊர்திகள் வாங்கிக் கொடுத்த விவகாரமும் அடங்கும்.