மூசா மீது குற்றம் சாட்டாமல் விட்டது எஜிசி, நாங்கள் அல்ல என்று பிரதமரிடம் எம்எசிசி கூறுகிறது

 

சாபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமான் மீது 2012 ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. அம்முடிவை எடுத்தது சட்டத்துறை தலைவர் அலுவலகம் (எஜிசி), நாங்கள் அல்ல என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) இன்று கூறிற்று.

மூசா மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை என்பதற்கு எம்எசிசி விளக்கம் அளிக்க வேண்டும், அன்றைய சட்டத்துறை தலைவர் கனி பட்டேல் அல்ல என்று பிரதமர் மகாதிர் நேற்று கூறியிருந்ததற்கு எம்எசிசி மேற்கண்ட பதிலை அளித்துள்ளது.

அந்தக் குறிப்பிட்ட காலத்தில், அரசியல் நன்கொடைகள் சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பின் மீதும் குற்றம் சாட்டுவதில்லை என்பது சட்டத்துறை அலுவகத்தின் கொள்கையாகும் என்று எம்எசிசி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.

சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினரான மூசா மீது கடந்த திங்கள்மிழமை ஊழல் சம்பந்தப்பட்ட 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மூசாவுக்கு எதிரான இந்த வழக்கில் அரசு தரப்பை பிரதிநிதித்த கோபால் ஶ்ரீராம், எம்எசிசியிடம் மூசாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்த போதிலும் அன்றைய சட்டத்துறை தலைவர் கனி பட்டேல் நடவடிக்கை எடுக்காதது குறித்து வியப்படைந்தார்.

கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், மூசா மீது ஏன் 2012 ஆம் ஆண்டில் வழக்குத் தொடரவில்லை என்பதற்கு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க கனி பட்டேல் கடமைப்பட்டிருக்கிறார் என்று கூறினார்.