தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல்

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. 

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.

தற்போது கஜா புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தின் உள்மாவட்டங்களில் திண்டுக்கல் பகுதிக்கு அருகே நிலவி வருகிறது. இதனால் அப்பகுதியில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த மழையும் பெய்து வருகிறது.

பகல் 14.59: தமிழக எல்லையைக் கடந்து கேரளாவுக்குச் சென்றது கஜா புயல். இன்று மாலை அரபிக் கடல் நோக்கி செல்லும்

பகல் 14.11: தமிழகத்தில் ‘கஜா’ புயல் தாக்குதலினால் பலியானோர் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. நாகபட்டிணத்தில் இருவர் மற்றும் கொடைக்கானலில் பெண் ஒருவர் உயிரிழந்த காரணத்தால் தற்போது எண்ணிக்கை 20-இல் இருந்து 23-ஆக உயர்ந்துள்ளது.

பகல் 13.10: கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை: கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.