ஃபூஸி : காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய பணி ஓய்வு’ அதிகரிப்பு

காவல்துறையினர் மத்தியில், ‘முன்கூட்டிய பணி ஓய்வு’ போக்கு, கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக தலைமை காவல்துறை அதிகாரி முகமட் ஃபூஸி ஹருண் கூறினார்.

இவ்வாண்டு அக்டோபர் வரையில், 5,000-க்கும் அதிகமானோர், முன்னதாக பணி ஓய்வு பெற்றுவிட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

“அவர்களில், 2,446 போலிஸ்காரர்கள் சொந்தத் தேர்வாக பணி ஓய்வு பெற்ற வேளையில், மீதமுள்ளவர்கள் கட்டாயப் பணி ஓய்வு பெற்றனர்.

“இப்போக்கு, கடந்த 5 வருடங்களாக, பல்வேறு காரணங்களுக்காக அதிகரித்து வருகிறது.

“அவற்றுள், குடும்பத்தில் நோய்வாய்பட்டவர்களைக் கவனித்தல், மனச்சோர்வு அல்லது பணிச்சுமை, உடல்நலப் பிரச்சனை காரணமாக ஓய்வுபெற விரும்புதல் போன்றவை அடங்கும்,” என இன்று, போலிஸ் அடிப்படை பயிற்சி திட்டத்தைப் பார்வையிட, போலிஸ் பயிற்சி மையத்திற்கு வருகைதந்த அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் 5,000-த்திற்கும் மேற்பட்டவர்கள் பணிஓய்வு பெறுவதாகவும், அவ்விடங்களை நிரப்ப, சுமார் 7,000 புதிய நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இந்த முன்கூட்டிய பணிஓய்வால், மலேசியப் போலிஸ் படை பாதிக்கப்படுகிறது, காரணம், பல உயர் அதிகாரிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த போலிஸ்காரர்களை இழக்க வேண்டி வருகிறது என ஃபூஸி மேலும் கூறினார்.

-பெர்னாமா