ஜி20: வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா – சீனா முடிவு

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இறக்குமதி பொருட்களுக்கு ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு வரிகள் விதிக்கப்போவதில்லை என்ற உடன்படிக்கையை எட்டியுள்ளதாக சீன அரசு தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது. மேலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரு தரப்புகளும், பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிகள் விதித்துள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, 250 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தது. இதற்கு பதிலடியாக 110 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது சீனா வரி விதித்தது.

“பொருளாதார வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தகப் போரை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா மீது சீனா குற்றஞ்சாட்டியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்தித்து சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே வணிகப்போர் நடந்துவரும் நிலையில், அவர்கள் நடத்திய முதல் பேச்சுவார்த்தை இதுவே.

அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாடு சனிக்கிழமையன்று முடிந்த பிறகு, இரவு உணவுக்கு சந்தித்த இருவரும் நடத்திய பேச்சுவார்த்தை “மிகவும் சிறப்பாக” சென்றதாக அதிபர் டிரம்பின் ஆலோசகர் லாரி குட்லோ தெரிவித்தார். ஆனால், அது குறித்த வேறு எந்த தகவல்களையும் அவர் வெளியிடவில்லை.

பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்து “ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக” சீன செய்தியாளர் ஒருவர் கூறியதாக ராய்டர்ஸ் தெரிவிக்கிறது.

முன்னதாக சனிக்கிழமை நடந்த மாநாட்டில் ஜி20 தலைவர்கள் கூட்டு அறிக்கைக்கு ஒப்புக் கொண்டனர். அந்த ஆவணமானது வர்த்தகத்தின் மீது சில பிளவுகளை கொண்டிருந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை விமர்சிக்கவில்லை.

அவர்களின் நாடுகளுக்கான சிறந்த தேர்வாக இருந்தது ஒத்துழைப்பு என்று இரவு உணவின் போது சீன அதிபர் கூறியதாக, அந்நாட்டு அரசு செய்தி மையமான சின்ஹூவா தெரிவிக்கிறது.

இலங்கை
இலங்கை

இருவரும் “சிறப்பான உறவை” பகிர்ந்து கொண்டதாக கூறிய டிரம்ப், “சீனா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இறுதியில் சில நன்மை கிடைக்க, அதுவே முக்கிய காரணமாக இருக்கும்” என்று கூறினார்.

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் செய்தியாளர்களிடம் கூறுகையில், வணிக சர்ச்சைகளை முறைப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பு நவீனப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜி20 மாநாட்டை ஒட்டி, வெள்ளிக்கிழுமையன்று அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்ததாக ரஷ்ய அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் மறைவை தொடர்ந்து, முன்னதாக திட்டமிடப்பட்ட கருத்தரங்குகளை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

சீனாபடத்தின் காப்புரிமைEPA

சிலி அதிபர் செபாஸ்டியன் பினரா பிபிசியிடம் கூறுகையில், “இந்த முட்டாள்தனமான வர்த்தகப் போரை” முடிவுக்கு கொண்டு வர உடன்படிக்கை எட்டப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார். -BBC_Tamil