இலங்கை தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் அடங்கிய வகையில் வரையப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபை எதிர்வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் காணப்பட்டுள்ள இணக்கத்தை எழுத்துமூலம் இருதரப்பினரும் பரிமாற்றிக் கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.

இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கும், புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பு வரைபை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட வேண்டும் என்ற விடயத்திலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கு, ஆதரவு வழங்கவும் ஐக்கிய தேசிய முன்னணி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும், அதற்கான திட்டங்களை வகுக்கும் நடவடிக்கைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் காணி பிரச்சனைகள், காணிகளை அத்துமீறி தன்வசப்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியினர்  தம்முடன் இணக்கத்தை எட்டியுள்ளதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொண்ட ஒரு கட்டமைப்புக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான அனைத்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய வகையிலான எழுத்துமூல ஆவணமொன்று எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது, இரு தரப்பினரும் பரிமாற்றிக் கொள்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார். _BBC_Tamil

TAGS: