‘சொகுசு விமானமும், அதிபர் மாளிகையும் வேண்டாம்’ – மெக்சிகோ புதிய அதிபர்

கடந்த ஏழு தசாப்தங்களில் முதல் முறையாக இடதுசாரி ஒருவர் மெக்சிகோவின் அதிபராக பதவியேற்றுள்ளார்.

மெக்சிகோ நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வில் 65 வயதாகும் ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோர் சனிக்கிழமை புதிய அதிபராகப் பதவியேற்றார்.

மெக்சிகோ அதிபருக்கான சொகுசு விமானத்தை விற்கப்போவதாகவும், அதிபர் மாளிகையில் வசிக்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ள அவர், அதிபருக்கு வழங்கப்படும் ஊதியம் 60% குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது பெயரின் முதல் ஆங்கில எழுத்துக்களை வைத்து ‘அம்லோ’ (AMLO) என்று பரவலாக அழைக்கப்படும் ஆண்ட்ரேஸ் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார்.

இதற்கு முன்பு இரண்டு முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்டாலும் அவர் தோல்வியையே தழுவினார். தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மேயராகவும் ஆண்ட்ரேஸ் பதவி வகித்துள்ளார்.

புதிய அதிபருக்கு 56% மக்கள் ஆதரவு உள்ளதாகவும், அதிபர் பதவியில் இருந்து வெளியேறியுள்ள என்ரிக் பினா நியேடோவுக்கு 24% மட்டுமே மக்கள் ஆதரவு இருப்பதாகவும் சமூக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முந்தைய ஆட்சிக்காலத்தில் ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நடக்கும் கொலைகள் அதிக அளவில் இருந்தன.

மெக்சிகோவில் 2018ஆம் ஆண்டில் மட்டும் 29,000 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை போதைப்பொருள் விற்கும் கும்பல்களுக்கு இடையேயான மோதல்களால் நிகழ்ந்தவை.

இடதுசாரி தலைவர்

தனது தேர்தல் பிரசாரத்தின்போது, தமக்கு முன்பு பதவியில் இருந்தவர்களால் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக கையாளப்படும் ராணுவத் தன்மையுடனான நடவடிக்கைகளை இந்த இடதுசாரித் தலைவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

நான்காவது மாற்றம்

மெக்சிகோ வரலாற்றில் நான்காவது மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்று ஆண்ட்ரேஸ் தனது உரையில் கூறியுள்ளார்.

1810இல் மெக்சிகோ விடுதலை அடைந்தது. இது அந்நாட்டின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த முதல் மிகப்பெரிய மாற்றமாகும். பின்னர் 1854 முதல் 1857 வரை அப்போதைய அதிபராக இருந்த பெனிட்டோ ஜூவாரேஸ் மேற்கொண்ட பொருளாதார தாராளமயமாக்கல் அந்நாட்டின் வரலாற்றில் இரண்டாவது முக்கிய மாற்றமாகும்.

1910 முதல் 1920 வரை நடந்த புரட்சி, அப்போது நடந்த போர்கள் ஆகியவை தற்கால மெக்சிகோவை நிறுவியது மூன்றாம் மிகப்பெரிய மாற்றமாகும்.

“இப்போது வரவுள்ள மாற்றங்கள் அமைதியாக இருக்கும். ஆனால் ஆழமாகவும் தீவிரமாகவும் இருக்கும்,” என ஆண்ட்ரேஸ் தெரிவித்துள்ளார்.

“கடந்த 30 ஆண்டுகளில் மெக்சிகோவில் கிட்டத்தட்ட எல்லாமே தனியார்மயம் ஆக்கப்பட்டுள்ளன. அந்த மோசமான கொள்கைகள் அனைத்தும் மாற்றப்படும்,” என்று அம்லோ குறிப்பிட்டார்.

தமது ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்தபின் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ஆண்ட்ரேஸ் கூறியுள்ளார்.

தஞ்சம் கோரிகள் பிரச்சனை

மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்கா நோக்கி, மெக்சிகோ வழியாகச் செல்லும் தஞ்சம் கோரிகளை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா மறுத்துவரும் நிலையில், மெக்சிகோவில் உள்ள அவர்களைச் சமாளிப்பது புதிய அதிபரின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய சவாலாக இருக்கும்.

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோர் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோர்

அண்டை நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ மற்றும் மெக்சிக மக்களிடம் மரியாதையான மனநிலையுடன் நடந்துகொள்வதாக ஆண்ட்ரேஸ் கூறியிருந்தார். புதிய அரசுடன் நல்ல உறவு பேணப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவை நோக்கிச் செல்லும் தஞ்சம் கோரிக்கைளை நெறிப்படுத்தும் ஒப்பந்தத்தை இவர் மத்திய அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் கையெழுத்திட்டுள்ளதாக ஏ.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பொருளாதார சிக்கல்கள்

ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோர் பொருளாதாரம் குறித்து கூறிய சில கருத்துகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அசௌகரியங்களை உண்டாக்கியுள்ளது.

மெக்சிகோ சிட்டியில் கட்டப்பட்டுவரும் புதிய விமான நிலைய திட்டத்தை ‘மக்களின் ஆலோசனைப்படி’ ரத்து செய்வதாக நவம்பர் 29 அன்று இவர் அறிவித்தார். இது அங்கு பங்குச் சந்தைகளில் வீழ்ச்சியை உண்டாக்கியது.

ஏற்கனவே அமலில் உள்ள எண்ணெய் ஒப்பந்தங்களில் உள்ள ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்றும் புதிதாக எண்ணெய்க் கிணறுகளுக்கான சோதனை செய்யப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மெக்சிகோ மத்திய வங்கியின் தன்னாட்சி உரிமையை மதிப்போம் என்றும் வரி வருவாயைவிட அதிகமாக செலவு செய்ய மாட்டோம் என்றும் தனது உரையில் அவர் கூறியுள்ளார். -BBC_Tamil