மேகதாதுவை விடுங்க.. ஒகேனக்கல்லில் அணை கட்டுங்க.. கரண்டை எடுங்க.. தம்பிதுரை ஐடியா

கரூர்: மேகதாதுவுக்கு பதிலாக ஒகேனக்கல்லில் அணை கட்டி கொள்ளலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில் இவர்கள் (பாஜக) கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை ஆண்டதில்லை. அப்படியிருக்கையில் இவர்கள் தேசிய கட்சிகள் என்பது எப்படி சொல்ல முடியும். ஆக இவர்களெல்லாம் மாநில கட்சிகள்.

இவர்கள் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப நிலைப்பாடுகளை எடுகிறார்களே ஒழிய தேசத்திற்கு நல்லது என்ற நிலையை இந்த தேசிய கட்சிகள் எடுப்பதில்லை. உண்மையில் தேசிய கட்சிகள் என்றால் அவர்கள் தமிழகத்தின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய கட்சிகள் காணாமல் போய்விட்டன. ஒரு மாநிலத்தின் மொழியை காப்பதற்காகவும், கலாசாரத்தை காப்பதற்காகவும் இயக்கங்கள் இருக்கின்றன. மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வற்புறுத்துவோம். அந்த ஆணையத்தின் தலைவரும் தெளிவாக சொல்லியுள்ளார். அதாவது ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.

உச்சநீதிமன்றமும் தனது தீர்ப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது. காவிரியில் அணை கட்ட வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்டக் கூடாது. எனவே மேகதாது அணை வராது. இதற்கு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் நாடகம் ஆடி கொண்டிருக்கிறார்.

மேகதாதுவுக்கு பதிலாக ஒகேனக்கல்லில் அணை கட்டிக் கொள்ளலாம். ஒகேனக்கலில் அணை கட்டி கர்நாடகத்துக்கு மின்சாரம் தரலாம் என எம்ஜிஆர் கூறியிருந்தார். பெங்களூருக்கு தேவையான நீரை கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தின் நலனுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தம்பிதுரை தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: