’ஊருக்கே அரிசியும் உப்பும் போட்ட பூமி… இப்போ?’

தண்ணீர் தாகம் எடுத்தது. காரை நிறுத்தினோம். ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன் இறங்கினார். கடைக்கு சென்றார். ஏதோ பேசினார், பேச்சு நீண்டுக் கொண்டே போனது. தண்ணீர் பாட்டிலோடு வந்தார்.

“என்ன பேசினார், ஏன் நேரம் ஆகியது?”, என்று கேட்டேன்.

அதற்கு முருகன், “இல்லண்ணா. வழக்கம் போல் ‘கூலிங் வாட்டர் வேண்டாம்’ என்றேன், அதற்கு கடைக்காரர், ” பதினைந்து நாளா கரண்ட்டே இல்ல, அதனால் கூலிங் வாட்டரே இல்லிங்க” என்றார்.

அதை கேட்டவுடன், ஷாக் அடித்தது போல் இருந்தது. அதுவரை இருந்த உணர்வு நிலை மாறியது. அப்போது தான் உரைத்தது, பதினைந்து நாட்களாக மின்சாரம் இல்லை என்பது. இது தான் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி நிலை.

சில நாட்களுக்கு முன், வேதாரண்யம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தொடர்பு கொண்டார். “திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு புயல் நிவாரணப் பொருட்களை நீங்கள் அனுப்பியதை பார்த்தேன். உங்க அரியலூர் மாவட்டம் முழுதுக்கும் நாங்க தான் உப்பு சப்ளை பண்றோம். அதனால் பல பெரிய மளிகைக் கடைக்காரங்க கிட்ட உதவி கேட்டிருக்கிறேன். உங்க நண்பர்கள் உதவ முன்வந்தால், வேதாரண்யம் அனுப்புங்க. வேதாரண்யம் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு”, என்றார்.

வேதாரண்யம் பாதிப்பு நாடே அறிந்தது. ஆனால், பதினைந்து நாட்கள் கழித்தும் அரசு உதவிகள் வந்து சேரவில்லை என்பது தான் மிக முக்கியமாக கவனிக்கப்பட விஷயம்.

ஆண்டிமடம் ஒன்றிய தி.மு.கழகம் சார்பாக அறுபது குடும்பங்களுக்கு தேவையான  அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வேதாரண்யம் பகுதிக்கு அனுப்ப தயாரானார்கள்.

புயல் பாதித்த பகுதிகளில் பதினைந்து நாட்களுக்கு பிறகு என்ன நடந்துள்ளது என்று பார்க்கலாம் என்று கிளம்பினோம். அப்போது தான் முதல் அனுபவமே நிலைமையை சொல்லியது.

கும்பகோணத்தில் இருந்து செல்லும் போது, மன்னார்குடி பகுதியை தாண்டும் போதே போர்களத்தில் நுழைந்த எண்ணம். முதல் பாதிப்பாக மின் துறை தான் வெளுத்து வாங்கப்பட்டிருந்தது.

வழி நெடுக மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. வயர்கள் அறுந்து கிடந்தன. போக போக உயர்ந்த மரங்கள் சாய்ந்து கிடந்தன. சில இடங்களில் நெற் பயிரும் சாய்ந்து கிடந்தது, யானை ஏறி மிதித்தது போல.

குடிசை வீடுகள் மொத்தமாக சாய்க்கப்பட்டு கிடந்தன.  ஓட்டு வீடுகளில்  பாதிக்கும் மேற்பட்ட ஓடுகள் சேதம். கான்கிரீட் வீடுகளில் மேற்புறம் சிலர் ஷெட் அமைத்திருந்தனர். அவைகள் காற்றினால் கிழித்து எறியப்பட்டிருந்தன.

சாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் அறிவிப்பு பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவை தான் தமிழகத்தின் நெற் களஞ்சியத்தின் அவலத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன.

-nakkheeran.in

TAGS: