நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது – விஜய் சேதுபதி அதிரடி பேட்டி!

டிவி, மிக்சியை பற்றி பேசுவது மட்டும் அரசியல் இல்லை, நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது என்று விஜய் சேதுபதி கூறினார்.

கேள்வி:- படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

பதில்:- கதை தான் தேர்வு செய்ய வைக்கிறது. கேட்கும்போதே அது நம்மை ஈர்க்க வேண்டும். எப்படியாவது இந்த படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவேண்டும். அப்படிப்பட்ட கதைகளை தான் தேர்வு செய்கிறேன்.

கே:- உங்களுடன் நடித்த நாயகிகள் பற்றி?

ப:- திரிஷா மர்மமான நபர். நயன்தாரா தன்னை எப்படி கேமரா முன்னால் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக புரிந்தவர். ஐஸ்வர்யா ராஜேஷ் கடின உழைப்பாளி. மடோனா மிகவும் உணர்ச்சிகரமான நபர். ரம்யா நம்பீசன் மிகவும் திறமையான நடிகை. பிறவி நடிகை என்றே சொல்லலாம்.

கே:- படங்களின் தோல்வி உங்களை பாதிக்குமா?

ப:- இல்லை. ஜுங்கா படம் பற்றி நண்பர் ஒருவர் சொன்னதை பகிர்கிறேன். இந்த படத்தில் எந்த இடத்திலும் காமெடி இல்லை. ஆனால் தியேட்டரில் மக்கள் ரசித்து சிரிக்கிறார்களே என்றார்.

இந்த சந்தேகத்துக்கு நான் என்ன பதில் சொல்வது? எல்லா படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் தான் கிடைக்கும். 96, செக்கச்சிவந்த வானம் படங்களுக்கு கூட எதிர்மறை விமர்சனம் வந்தது. பெரும்பான்மையான மக்கள் சொல்வதே இங்கு தீர்ப்பாக ஏற்றுக்கொள்ள முடியும்.

கே:- அதிக படங்களில் நடிப்பது அழுத்தம் தர வில்லையா?

ப:- ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்துக்கான பொறுப்பு என்னையே சேரும். ஆனால் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற எந்த அழுத்தமும் இல்லை. நீங்கள் எப்படி வேலை பார்த்தாலும் ஆண்டுக்கு 4 படங்களுக்கு மேல் நடிக்க முடியாது.

என்னுடைய பொறுப்பு அதிக படங்கள் தருவது அல்ல. மக்கள் விரும்பும் படங்களை தருவது தான். என்னால் நடிக்க முடியாத கதைகளை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கதைகள் மீண்டும் எனக்கே வரும்போது கதையின் முக்கியத்துவம் கருதி நான் நடிக்க வேண்டியதாகிறது.

கே:- ‘பேட்ட’, ‘செக்கச் சிவந்த வானம்‘ போல பிற நடிகர்களுடனும் நடிப்பது ஏன்?

ப:- அது பெரிய வரம். மற்றவர்களுடன் நடிக்கும்போது நமக்கு முக்கியத்துவம் போய் விடுமோ என்று நினைப்பதே கேவலமானதாக பார்க்கிறேன். நமது திறமையை யாராவது வந்து திருடிவிட முடியுமா? மற்ற நடிகர்கள் நடிப்பதை கவனிப்பது என்பது மிகச்சிறந்த அனுபவம்.

கே:- ஏழு பேர் விடுதலைக்காக ஆளுநருக்கு கோரிக்கை உள்பட பல வி‌ஷயங்களில் குரல் தருகிறீர்களே?

ப:- குரல் தருவது என்பது மனிதனுடைய இயல்பு. 28 ஆண்டுகள் அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டார்கள். போதும், அது முடிந்துவிட்டது. அவர்களை மன்னிக்கலாமே. இதைத் தாண்டிப் பேசினால் அது அரசியல் சார்ந்து போய்விடும்.

கே:- அரசியல் பேசும் திரைப்படங்கள் அதிகரிக்கின்றன. உங்கள் படங்களிலும் அரசியல் இருக்குமா?

ப:- இங்கே எல்லாமே அரசியல்தான். டி.வி, மிக்சியைப் பற்றி மட்டும் பேசுவது அரசியல் இல்லை. ஒரு சாதியைத் தூக்கிப்பேசுவது; இன்னொரு ஜாதியை இழிவுபடுத்துவது எல்லாமே அரசியல்தான்.

சினிமாக்கள் அரசியல் பேசணும். மக்களுக்கு வி‌ஷயங்கள் போய்ச் சேரணும். சென்சார் முடிஞ்சு வர்ற படங்களை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

சினிமாக்காரங்களுக்குக் குளிர்விட்டுப் போயிடுச்சு’ன்னு சொல்றாங்க. உங்களை ஓட்டு போட்டு உட்கார வெச்சுருக்கோம். எங்களை மிரட்டுறது உங்கள் வேலையே கிடையாது. எங்களுடைய கருத்து தவறா இருந்தா அதை எதிர்த்துக் கேள்வி கேட்கலாம். ஆனா, மிரட்டுவது ரொம்பத் தவறு.

கே:- புயல் நிவாரணப் பணிகளின்போதே சாதியத் தீண்டாமைகளெல்லாம் நடந்ததே. இதை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?

ப:- சாதிக்கு ஆதரவா நீங்க பண்ற எல்லாமே உங்க எதிர்கால சந்ததியினருக்கு நீங்க பண்ற துரோகம். சாதிப் பெருமையைச் சொல்லி உங்க குழந்தையை வளர்க்கலாம், படிக்க வைக்கலாம். ஆனா, அந்தக் குழந்தை எல்லாரும் இருக்கிற இந்தச் சமூகத்துலதானே வாழப்போகுது.

சாதியை காப்பாத்துங்க, மதத்தைக் காப்பாத்துங்கன்னு சொல்லாதீங்க… ஊரைக் காப்பாத்துவோம், சமூகத்தைக் காப்பாத்துவோம்னு சொல்லுங்க. அதுக்கு சாதி முக்கியமில்லை.

முக்கியமா பெண்கள் இதை உணரணும். ஏன்னா, அடுத்த தலைமுறையே பெண்கள் கையில்தான் இருக்கு. இதை உணர்ந்து அவங்களுடைய குழந்தைகளை சாதியைப் பத்திச் சொல்லாம வளர்க்கணும். அவங்க நினைச்சா எல்லாமே மாறும்னு நம்புறேன். எல்லாத்துக்கும் கடவுளை இழுக்காதீங்க. நமக்கு ஏதாவது ஒண்ணுன்னா கடவுள் கண்டிப்பா வர மாட்டார். நாமதான் வரணும்.

கடவுள் எதுன்னு பகுத்தறிந்து உணர்ந்து செயல்படுங்க. கடவுளைக் காப்பாத்துறேன்னு சொல்லி நிறைய பெருங் கடவுள்கள் எல்லாம் வருவாங்க. அவங்ககிட்ட இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

கே:- நீங்க நிறைய சமூகக் கருத்துகள் சொல்கிறீர்கள், உதவிகளும் செய்கிறீர்கள். அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா?

ப:- தயவு செய்து இப்போது அரசியலுக்கு வந்தவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அவர்களைக் கேள்வி கேட்டுப் பழகுங்க. அது சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

-athirvu.in