தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு தடை…

சென்னை: தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில், ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில், நாளை முதல் இரு நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த தியான நிகழ்ச்சிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு, அவசர அவசரமாக இன்று மதியமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கிலும் இருந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

தியான நிகழ்ச்சி

இந்தநிலையில், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் வாழும் கலை அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை முதல் இரு நாட்களுக்கு கோயில் வளாகத்தில் மிகப்பெரிய தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தியான நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கோயில் கட்டிடம்

இதையொட்டி, கோயில் வளாகத்தில் மிகப் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இரும்பாலான ஷீட் கொண்ட பந்தல் இதுவாகும். கோவில் வளாகத்தில் உள்ள புல்வெளி பகுதியில் கம்புகள் நடப்பட்டு இந்த பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி இந்திய தொல்லியல் துறை, பராமரிப்பில் உள்ள பகுதியாகும். இந்து சமய அறநிலையத்துறை, ஆணையரிடம் இருந்து இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி பெறப்பட்டு உள்ளது. கோயில் வளாகத்தில் இது போல பந்தல் அமைப்பது உள்ளிட்டவை கட்டிடங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மதியம் விசாரணை

இந்த நிலையில், வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தியான நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். நாளையே தியான நிகழ்ச்சி நடைபெற நடைபெற உள்ளதால் இந்த மனுவை, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முத்துகிருஷ்ணன் கோரிக்கை விடுத்ததை அடுத்து இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய ஹைகோர்ட், புனிதமான கோயிலுக்குள் எதற்காக தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது. கோயில் வளாகத்தில் சேதம் ஏற்படாது என்றும் தியானம்தான் நடத்தப்படும் என்றும் தொல்லியல் துறை வாதிட்டது. இதை ஏற்க மறுத்த ஹைகோர்ட், தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்தது. பந்தல்கள், நாற்காலிகளை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டது. இதுகுறித்து பதிலளிக்க மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கை தங்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சி, ட்விட்டரில் இதை வரவேற்றுள்ளது. அதேநேரம், தியான நிகழ்ச்சி வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

அபராதம்

ஏற்கனவே யமுனை நதிக்கரையில் இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி, அதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு குற்றச்சாட்டுக்கு ஆளானார், ரவிசங்கர். இதற்காக ரவிசங்கருக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-tamil.oneindia.com

TAGS: