‘கடந்த கால தியாகங்களை’க் கேட்டு அலுத்துப் போய்விட்டது: டிஏபி தலைவர்களுக்கு அறிவுறுத்து

நேற்றைய சிலாங்கூர் டிஏபி தேர்தல் முடிவு, தலைவர்கள் கடந்த கால அர்ப்பணிப்புகள் பற்றிப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு உறுப்பினர்களுக்கு அலுத்துப் போய்விட்டது என்பதைக் காண்பிப்பதாக தெங் சாங் கிம் கூறினார்.

டிஏபி மத்திய செயல்குழு உறுப்பினரான தெங், சிலாங்கூர் தலைவராக இருந்த டோனி புவா தேர்தலில் தோற்றுப் போனது குறித்துக் கருத்துரைத்தபோது அவ்வாறு கூறினார்.

டமன்சாரா எம்பியும் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் உதவியாளருமான புவா, சிலாங்கூர் டிஏபியின் 15 பேரடங்கிய செயல்குழுவுக்குப் போட்டியிட்டார். ஆனால், அவரால் பத்தொன்பதாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.

“தெளிவான செய்தி ஒன்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி வெற்றிபெற நினைத்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை ஆனால், கடந்தகாலத்திய தியாகங்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்காதீர்கள். உறுப்பினர்களுக்கு (கேட்டுக் கேட்டு) அலுத்துப் போய்விட்டது.

“மக்களுக்கும்தான்”, என்றவர் கூறியதாக ஃப்ரி மலேசியா டூடே கூறியது.

கடினமான காலத்திலும் கட்சிக்காக உழைத்த கடைநிலை உறுப்பினர்களை மறந்து விடக் கூடாது என்றாரவர்.

“தலைவர்கள் சிறையில் இருந்தபோது கடைநிலை உறுப்பினர்கள் பாடுபட்டார்கள். அதற்கு அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டதா?

“பலர் பலனை எதிர்பார்க்காமல் தொடர்ந்து உழைத்தார்கள். இருந்தும் அவர்களைக் கண்டுக்கொள்ளவில்லை. அவர்களுக்கென ஏதாவது செய்தாக வேண்டும்”, என்று தெங் கூறினார்.

பக்கத்தான் ஹரப்பான் 14வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றபோது டிஏபி உயர் தலைவர்கள் பலனடைந்தனர். இனி, அவர்கள் எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பேச வேண்டுமே தவிர கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது என்றவர் வலியுறுத்தினார்.