பாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க ஆர்சிஐ அமைப்பீர்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், தம் கட்சி தாபோங் ஹாஜி நிதிநிலையை ஆராய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதை அல்லது நாடாளுமன்றம் அதை விசாரிக்கப்பதையே விரும்புவதாகக் கூறினார்.

“பாஸ் நாட்டின் மிகப் பெரிய இஸ்லாமிய நிதிக்கழகத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் குளறுபடிகளைக் கடுமையாகக் கருதுகிறது.

“அதை அமைச்சர், அதிலும் புதியவர் ஊடகங்களில் வைத்து விவாதித்துக் கொண்டிருக்கக் கூடாது. அது குழப்பத்தைத்தான் உண்டாக்கும்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

கூட்டரசு அரசாங்கம் அவ்விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. அப்படி செய்தால் தாபோங் ஹாஜியின் பெயர்தான் கெடும் என்று ஹாடி கூறினார்.
அரசாங்கம் நேர்மையாக நடந்துகொண்டு பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களையும் விசாரிக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

ஹாடி முஜாஹிட் யூசுப் ராவாவைத்தான் குறிப்பிடுவதாக தெரிகிறது. அவர்தான் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்.

கடந்த வாரம் முஜாஹிட், தாபோங் ஹாஜி மீதான பிரைஸ்வாட்டர்ஹவுஸின் கணக்குத் தணிக்கை அறிக்கையை வெளியிட்டார்.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ் அதன் கணக்கறிக்கையில் சொத்துகளை விட கடன்கள் அதிகம் இருந்த போதிலும் தாபோங் ஹாஜி 2016க்கும் 2017-க்குமிடையே நிதி வைப்பாளர்களுக்கு இலாப ஈவு கொடுத்துள்ளது என்று குறிப்பிட்டது.

அதற்கு அக்கழகம் அது வேறுவிதமான கணக்கீட்டு முறை என்று கூறியது.

பிஎன் தலைவர்கள் பலர் தாபோங் ஹாஜி விவகாரத்தை ஆராய ஆர்சிஐ அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பாஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கைருடின் அமான் ரசாலி பிரைஸ்வாட்டர்ஹவுஸின் கணக்கறிக்கையிலேயே சந்தேகம் கொள்வதாகக் கூறினார்.

தாபோங் ஹாஜி முன்னாள் தலைவர் அப்துல் அசீஸ் அப்துல் ரகிம் கணக்குகள் எல்லாம் ஒழுங்காகத்தான் உள்ளன என்றார். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கோ ஹரப்பான் அரசாங்கம் இதை வைத்து அரசியல் ஆடுகிறது என்று குற்றஞ் சாட்டினார்.