“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தேர்தல் குழுவின் பரிந்துரைகள் செல்லுபடியாகாது”

தேர்தல் சீர்திருத்தம் மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அந்தப் பரிந்துரைகள் செல்லுபடியாகாது என மக்களவை துணை சபாநாயகர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபார் கூறுகிறார்.

அந்தப் பரிந்துரைகளைப் புதிதாக பதவி ஏற்றுள்ள எம்பிக்கள் நிராகரித்தால் முழு சீர்திருத்த நடவடிக்கையும் தூக்கி எறியப்பட்டு விடும் என அவர் தெரிவித்ததாக ஒரியண்டல் டெய்லி நியூஸ் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

தேர்வுக் குழு தனது பணிகளை முடிப்பதற்கு முன்னதாக 13வது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால் அந்தக் குழுவும்  கலைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அந்தப் பரிந்துரைகள் செல்லுபடியாகாது என்பதே அதன் பொருள் ஆகும்.

என்றாலும் அந்தக் குழுவின் பணிகளைத் தொடருவதா இல்லையா என்பதை புதிய நாடாளுமன்றமும் புதிதாக அமைக்கப்படும் அரசாங்கமும் முடிவு செய்ய வேண்டும் என்றும் வான் ஜுனாய்டி சொன்னார்.

தேர்தல் சீர்திருத்த முயற்சிகளை புதிய அரசாங்கம் ஆதரிக்குமானால் பழைய தேர்வுக் குழு விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடருவதற்கு புதிய குழுவை அமைக்க புதிய தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு மாறாக தேர்தல் சீர்திருத்தத்தை புதிய நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை எம்பி-க்கள் நிராகரித்தால் அது முடக்கப்பட்டு விடும்.

சீர்திருத்தங்கள் மீதான பணியை முடிக்க குழுவுக்கு ஒராண்டு அவகாசம் தேவை

பரிந்துரைகளைத் தயாரிப்பதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு ஒர் ஆண்டு தேவைப்படும் என வான் ஜுனாய்டி மதிப்பிடுகிறார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்தால் உத்தேச சீர்திருத்தங்களை அடுத்த தேர்தலில் பின்பற்ற முடியாது.

“அதுவும் அந்தக் குழு விவாதிக்கும் விஷயங்களைப் பொறுத்துள்ளது. அது வெகு விரைவாகக் கூட பரிந்துரைகளைச் சமர்பிக்கலாம்.”

இதனிடையே அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தத்தை அமலாக்க முடியாது போனால் நடப்பு முறையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் அந்த சீன மொழி நாளேட்டிடம் கூறினார்.

“எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த” தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும் வான் அகமட் அறிவித்தார்.

இன்னொரு நிலவரத்தில் அந்த தேர்வுக் குழுவில் பங்கு கொள்ள டிஎபி மறுத்தாலும் அரசாங்கம் அந்தக் குழுவை அமைக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை மருட்டக் கூடாது என அவர் கோலா கங்சாரில் சின் சியூ டெய்லி என்ற இன்னொரு சீன மொழி நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

“டிஎபி பங்கு கொள்வதின் அடிப்படையில் அந்தக் குழு அமைக்கப்படவில்லை. அது அரசியல் தந்திரம் என நான் நினைக்கிறேன். அவர்கள் இப்போது அஞ்சுகின்றனர். ஏனெனில் அரசாங்கம் தேர்தல் முறையை சீர்திருத்துவதற்குப் பயப்படும் என அவர்கள் முதலில் கருதினர்.”

அந்தக் குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புக்கொள்ளும் முன்னர் தேர்தலுக்கு முன்னதாக சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என டிஎபி கூறவில்லை என்றார் அவர்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைப்பதில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்ளாததால் குழுவுக்கு பேராளர்களை அனுப்பப் போவதில்லை என்று எதிர்க்கட்சிகள் மருட்டியுள்ளன.

பிஎன்-னைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களையும் பக்காத்தான் ராக்யாட்டைச் சேர்ந்த மூவரையும் சுயேச்சை உறுப்பினர் ஒருவரையும் அந்தக் குழு கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் நியாயமற்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

குழுவுக்கு எதிர்த்தரப்பு தலைமை தாங்க வேண்டும் என்றும் சீர்திருத்தங்கள் அமலாக்கப்படும் வரையில் அடுத்த பொதுத் தேர்தல் நிகழாது என நஜிப் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் பக்காத்தான் ராக்யாட் கோரியுள்ளது.