சீனா: மக்கள் தொகை உயர்வு கண்டு வீழ்ச்சி அடையும் – எச்சரிக்கும் ஆய்வு

2029ஆம் ஆண்டில், சீனாவின் மக்கள்தொகை 1.44 பில்லியன் வரை எட்டுமென்றும்; அதன்பிறகு, தடுக்கமுடியாத சரிவை சந்திக்கும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

சமூக அறிவியல் ஆய்வுகள் குறித்த சீனாவின் அகாடமியா என்று குறிப்பிடப்படும் சி.ஏ.எஸ்.எஸ்-வின் ஆய்வறிக்கையில், அதிகப்படியான வயது முதிர்ந்த மக்களையும், பணியாற்றக்கூடிய வயதிலுள்ள மிக்குறைவான மக்களையும் சமாளிக்கும் வகையில், ஒரு அரசு கொள்கையை சீனா நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூறுகிறது.

இந்த இரு காரணிகளும் இணையும் போது, மக்களுக்கு சாதகமற்ற சமூகத்தையும், பொருளாதார பின்விளைவுகளையும் கொண்டுவரும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

சீனாவின் மக்கள்தொகை 1.41 பில்லியன் என கூறுகிறது ஐ.நாவின் சமீபத்திய அறிக்கை. கடந்த 2015ஆம் ஆண்டு, நாட்டின் மிகவும் பிரபலமான ஒரு குழந்தை திட்டத்தை கைவிட்டது சீனா.

சி.ஏ.எஸ்.எஸ் அமைப்பின் இந்த ஆய்வு முடிவுகள் கிரீன் புக் ஆஃப் பாப்புலேஷன் அண்ட் லேபர் என்ற அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

சீனா: 1.44 பில்லியன் மக்கள்தொகையை விரைவில் எட்டும்

பணியாற்றும் வயதில் இருக்கக்கூடிய சீனர்களின் எண்ணிக்கை என்பது தற்போது வளர்ச்சி அடையாமல் இருப்பதாவும், குறைவான குழந்தை பிறப்பு என்பது, இந்த பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நூற்றாண்டின் மத்தியில், சீனாவின் மக்கள்தொகை 1.36 பில்லியனாக குறையலாம் என்றும், அவ்வாறு குறையும் பட்சத்தில், பணியாற்றும் வயதில் உள்ளவர்களின் எண்ணிக்கை 200 மில்லியன் வரை குறையும் என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகள் பிறக்கும் விகிதம் இதே போன்று குறைவாகவே இருந்தால், 2065ஆம் ஆண்டில், சீனாவின் மக்கள் தொகை 1.17 பில்லியனாக இருக்கும்.

குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் என்று ஒருவரை சார்ந்து வாழ்வோரின் விகிதமும் உயரும் என்று தெரிவிக்கிறது. ஒரு குழந்தை திட்டத்தை கைவிட்டதன்மூலம், நீண்டகால பலன் இருக்கும் என்றாலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு இதனால், ஒருவரை சார்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே இந்த ஆய்வு கூறுகிறது.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளில், 2017ஆம் ஆண்டு 240 மில்லியனாக இருந்த சீனாவின் மக்கள்தொகை 2035ஆம் ஆண்டில் 400 மில்லியனை தாண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

-BBC_Tamil