சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் தரிசனம் – கேரள போலீசார் தகவலால் பரபரப்பு!

சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாக கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பக்தர்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் இளம்பெண்கள் பலரும் அணி, அணியாய் சபரிமலைக்கு சென்றனர்.

இதனால் சபரிமலையில் பதட்டமான நிலை உருவானது. சன்னிதானம் வரை சென்ற பெண்கள் 18-ம்படி ஏறாமல் திரும்பும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கேரள போலீசார் சபரிமலை செல்ல விரும்பிய பெண்களை ரகசியமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சபரிமலை சென்று 18-ம்படி ஏறாமல் பின்பக்க வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. முதன்முதலாக இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்ததாகவும் கூறப்பட்டது.

பிந்து, கனகதுர்காவை தொடர்ந்து நேற்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சசிகலா என்பவரும் ஐயப்பனை தரிசித்ததாக தகவல் வெளியானது. இவர், 18-ம் படி ஏறி சென்றதாகவும் கூறப்பட்டது.

இது உண்மைதான் என்று போலீசார் கூறினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தந்திரிகள் தெரிவித்தனர். இந்த குழப்பத்தை போக்க சன்னிதானத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் இருமுடி கட்டுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த பெண் சசிகலாதானா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இதற்கிடையே இலங்கை பெண் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த தகவலை முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகம் உறுதி செய்தது. இந்த தகவல் வெளியானதும் போலீசார் இன்னொரு தகவலை வெளியிட்டனர்.

சசிகலா, சாமி தரிசனம் செய்ததை உடனடியாக தெரிவித்தால் அவரது பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் என்பதாலேயே அவரை பத்திரமாக விமான நிலையத்தில் இறக்கிவிட்ட பின்பு இந்த தகவலை வெளியிட்டதாக தெரிவித்தனர்.

கேரள போலீசார் மேலும் இதுபற்றி கூறும்போது, சபரிமலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலேசியாவைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் சபரிமலை வந்ததாகவும், அதிலும் 3 இளம்பெண்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த இளம்பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக கூறினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 10 இளம்பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளதாகவும் கூறினர்.

இளம்பெண்கள் பலரும் அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர தயாராக இருக்கும் தகவலையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கு வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த இளம்பெண்கள் குறித்த விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

அந்த அறிக்கையில் எத்தனை இளம்பெண்கள் இதுவரை தரிசித்துள்ளனர் மற்றும் அவர்கள் யார்? யார்? என்ற விவரமும் வெளியாகலாம் என்று தெரிகிறது.

-athirvu.in

TAGS: