‘கூட்டமைப்பை பழிதீர்க்கும் நடவடிக்கையே ஜனாதிபதியின் ஆளுநர் நியமனம்’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்ட கோபத்தைத் பழிதீர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் அமைந்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற ஏறக்குறைய ஒரு வருடம் மட்டுமே உள்ளதாகவும் அதற்கிடையில், ஆளுநர்களை மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லையெனவும் தெரிவித்த அவர், ஆனால், ஜனாதிபதி தனது விருப்பத்துக்கு அமைவாக அதைச் செய்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார்.

அதில், ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்த ஹிஸ்புல்லாஹ்வை, அப்பதவியிலிருந்து வேண்டுமென்றே இராஜினாமா செய்வித்து, அவருக்கு கிழக்கு மகாணத்தின் ஆளுநர் பதவி வழங்கியிருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது கொண்ட ஆத்திரத்தை, ஜனாதிபதி சாதிப்பதற்கே எனவும் அவர் விசனம் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மகாண ஆளுநராக இதுவரை ஒரு தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எவருமே நியமிக்கவில்லையெனவும், அப்படியோர் எண்ணம் இருந்திருந்தால், அவர் 2015ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றபோதே அதைச் செய்திருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாமல், அவர்களின் கருத்துகளை அறியாமல், கூட்டமைப்பின் ஆலோசனை பெறாமல், ஆளுநராக ஹிஸ்புல்லாஹ்வை, ஜனாதிபதி நியமித்தமை, அவரின் சுயநல அரசியல் செயல்பாடு என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அரியநேத்திரன் தெரிவித்தார்.

-tamilmirror.lk

TAGS: