கேஎல்ஐஏ2-இல் முன்பு எலி இப்போது தேனீ- ஏர் ஏசியா போஸ் கிண்டல்

இரண்டாவது கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையக் கட்டிடம் ஒன்றில் தேன்கூடு ஒன்றிருப்பதைச் சுட்டிக்காட்டி கேஎல்ஐஏ2 நிர்வாகத்தைச் சாடியுள்ளார் ஏர் ஏசியா தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ்.

டிவிட்டரில் அதைப் பதிவிட்ட பெர்னாண்டஸ், கட்டிடத்தில் தேன்கூடு இருக்கும் படத்தையும் பகிர்ந்து கொண்டார்.

“கேஎல்ஐஏ2-இல் முன்பு புழுக்கள், காணப்பட்டன. பிறகு எலி, இப்போது தேனீக்கள்.

“விமான நிலைய வரியைக் குறைப்பதற்குத் தேன் விற்பனை மூலம் வருமானம் தேடப் பார்க்கிறார்கள் போலும்”, என்றவர் கிண்டலடித்திருந்தார்.

தேனீக்களால் பொதுமக்களுக்கு ஆபத்து நேரலாம் என்றவர் எச்சரித்தார்.

“இது விளையாட்டல்ல. இதனால் என் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் ஆபத்து நேரலாம். யாருடன் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ள விரும்பாத புதிய சிஇஓ இதைக் கவனிப்பாரா?”, என்று பெர்னாண்டஸ் வினவினார்.