கேமரன் மலை இடைத்தேர்தல் : பி.எஸ்.எம். போட்டியிடாது

ஜனவரி 26-ல் நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) போட்டியிடாது என அக்கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கட்சி விரும்பும் குணாதிசயங்களைக் கொண்ட வேட்பாளர்கள் இல்லாததால், அங்கு இம்முறை போட்டியிடப்போவதில்லை என்று அவர் சொன்னார்.

“கேமரன் மலையைச் சார்ந்த, அங்குள்ள மக்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்த, அங்கு சில ஆண்டுகள் சேவையாற்றிய ஒருவரைதான் நாங்கள் வேட்பாளராக நிறுத்த விரும்புவோம்.

“ஆனால், தற்போது பி.எஸ்.எம். சின்னத்தில் போட்டியிட எங்களை அணுகியவர்களிடம், அத்தகைய தகுதிகள் இல்லை, எனவே, கட்சி வேட்பாளரை நிறுத்தாது,” என்றார் அவர்.

இதற்கிடையே, கேமரன் மலையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்விகண்ட சுரேஸ் குமார், இடைத்தேர்தலில் களமிறங்க விருப்பம் இல்லை என அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து, “நாங்கள் கிளை உறுப்பினர்களைப் போட்டியிடக் கட்டாயப்படுத்த முடியாது,” என்று அந்த முன்னாள் சுங்கை சிப்புட் எம்பி கூறினார்.

“தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காண, நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

“தொழிலாளர் பிரச்சனை, சுகாதாரக் காப்பீடு, குறைந்தபட்ச சம்பளம், புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் போன்றவைக் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பல்வேறு நிகழ்ச்சிகளை நாங்கள் ஏற்பாடு செய்வோம்,” என்றார் அவர்.

கேவியஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், பி.எஸ்.எம். , மைபிபிபி-க்கு உதவி செய்யாது என்றும், அக்கட்சியுடன் எந்தவொரு தொடர்பும் தங்களுக்கு இல்லை என்றும் டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.

“அவருடைய கொள்கை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. மலேசியாவில் பலர் நெறிமுறைகள் மற்றும் மதப் பிரச்சனைகளைக் கையிலெடுத்து, பிரச்சாரம் செய்வார்கள், எங்களுக்கு அது பிடிக்காது,” என்று ஜெயக்குமார் சொன்னார்.