கேமரன் மலையில் முன்னாள் ஓராங் அஸ்லி போலீஸ் அதிகாரி பிஎன் வேட்பாளர்

ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலுக்கு முன்னாள் போலீஸ் அதிகாரியான ரம்லி முகம்மட் நூர்தான் தனது வேட்பாளர் என்பதை பிஎன் உறுதிப்படுத்தியது.

நேற்றிரவு நடைபெற்ற பிஎன் உயர் தலைமைத்துவக் கூட்டத்தில் அவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

இதனிடையே, மஇகா அத்தொகுதியில் போட்டியிடாததற்கு பணப் பற்றாக்குறையும் ஒரு காரணம் என்றும் அவ்வட்டாரம் கூறிற்று.

கேமரன் மலை 22 விழுக்காடு ஓராங் அஸ்லிகளையும் 34 விழுக்காடு மலாய்க்காரர்களையும் 30 விழுக்காடு சீனர்களையும் 15 விழுக்காடு இந்தியர்களையும் கொண்ட ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும்.

ரம்லி, ஓராங் அஸ்லி இனத்தில் பெரும்பான்மையினரான செமாய் சமூகத்தைச்ச் சேர்ந்தவர். அவரே, தீவகற்ப மலேசியா ஓராங் அஸ்லி சங்கத்தின் பொருளாளருமாவார்.

ஓராங் அஸ்லி வாக்குகளைக் கவர ரம்லி பிஎன் வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் என்று ஒரு வதந்தி சிறிது காலமாக உலவிக் கொண்டிருந்தது.

“ரம்லியின் தேர்வை பிஎன் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. மஇகாவும்கூட வரவேற்றது.

“அவர் ஒராங் அஸ்லி இனத்தவர் அத்துடன் ஒரு முஸ்லிம் என்பதால் ஓராங் அஸ்லி மற்றும் மலாய் வாக்காளர்களைக் கவரும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

“ஏனென்றால் ஓராங் அஸ்லி வாக்குகள்தான் இந்த இடைத் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கப் போகின்றன”, என்றந்த வட்டாரம் மேலும் கூறியது.