இராமசாமி: செனட்டில் ஒரு இடத்துக்காகவும் கொஞ்சம் நிலத்துக்காகவும் கேமரனை விட்டுக் கொடுத்தது மஇகா

செனட்டில் மேலும் ஒரு இடம் கிடைக்கிறது என்பதற்காக மஇகா கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக டிஏபி-இன் பி.இராமசாமி கூறினார்.

வழக்கமாக போட்டியிட்டு வந்த ஓரு தொகுதியில் இம்முறை போட்டியிடுவதில்லை என்று மஇகா முடிவு செய்ததற்கு இதுதான் காரணம் என்று ஊகிக்கப்படுவதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“மஇகா தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் பொய் சொல்ல விரும்பினால், அறிவுக்குப் பொருந்தாத ஒன்றைச் சொல்லாமல் நம்பக் கூடிய ஒன்றாகச் சொல்ல வேண்டும்.

“சீபீல்ட் ஆலய கலவரத்தால்தான் இடைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதென மஇகா முடிவு செய்ததென்று அவர் கூறுவது நியாயமாகப்படவில்லை.

“ஆலயக் கலவரமும் அதில் தீயணைப்பு வீரர் ஒருவரின் உயிரிழப்பும் மலாய்க்காரர்களிடையே இந்தியர் பிம்பத்துக்குக் கேடு விளைவித்தது விட்டதாக அவர் கூறினார். அதனால் மஇகா வேட்பாளரைக் களமிறக்கினால் மலாய்க்காரர் ஆதரவு கிடைக்காமல் போகலாம் என்றவர் சொன்னார்”, என இராமசாமி கூறினார்.

ஆனால், அதுவல்ல காரணம், 14வது பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் மஇகா பெற்ற வெற்றி செல்லாது என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னர் மஇகாவின் நம்பிக்கை தளர்ந்தது.

“மஇகா கேமரன் மலையை எதற்காக அம்னோவுக்கு விட்டுக் கொடுத்தது என்பதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அக்கட்சிக்கு செனட்டில் ஒரு இடமும் பகாங்கில் ஒரு துண்டு நிலமும் கொடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டுள்ளதாக ஒரூ வதந்தி உலா வருகிறது.

“கேமரன் மலையில் மஇகா போட்டியிடாததற்கு சீபீல்ட் ஆலயக் கலவரம்தான் காரணம் என்றால் இதற்குமுன் போர்ட் டிக்சனில் அது போட்டியிடாததற்கு காரணம் என்ன, அதுவும் அக்கட்சிக்குரிய தொகுதிதானே?

“அங்கும் இதே போன்ற ஆலயக் கலவரம்தான் மஇகா போட்டியிடுவதைத் தடுத்ததா? ஆக, சீபீல்ட் ஆலயக் கலவரதான் அவரது கட்சி கேமரன் மலையில் போட்டியிடாததற்குக் காரணம் என்று விக்னேஸ்வரன் கூறுவது அபத்தமாக உள்ளது”, என்றாரவர்.

மஇகா போட்டியிடாததற்கு வேறு காரணங்கள்கூட இருக்கலாம், அவை “நமக்குத் தெரியாமலேயே போகலாம்” என்றும் இராமசாமி மேலும் கூறினார்.