வவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில், புதிய சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா வடக்கில், சிறிலங்கா இராணுவ அச்சுறுத்தல்களால், பலவந்தமாக தமது வீடுகள், காணிகளை விட்டு தமிழர்கள் வெளியேற்றப்பட்ட, விரட்டியடிக்கப்பட்ட இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

முன்னதாக, தமிழர்களின் பூர்வீக நிலங்களாக இருந்த கொக்கஞ்சான்குளம் பகுதி இப்போது போகஸ்வெவ என்று சிங்களப் பெயர் சூட்டப்பட்டு, அங்கு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஊற்றுப்புலம் என்ற இடத்தை தற்போது, சப்புமல்கஸ்கொட என்று பெயரில் புதிய சிங்களக் குடியேற்றத்தை அமைக்கும் நடவடிக்கையில் பௌத்த பிக்கு ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

ஊற்றுப்புலத்தில் தமிழர் குடியிருப்புகள் அழிக்கப்பட்டு, வயல் நிலங்கள் காடு மண்டிக் கிடக்கிறது. இங்கிருந்த மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சிவில் பாதுகாப்புப் படையின் துணையுடன், சிங்களக் குடியேற்றத்தை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு புத்தர் சிலையை நிறுவியுள்ள பௌத்த பிக்கு ஒருவர், இங்கு வந்து குடியேறுவோருக்கு தலா ஒன்றரை ஏக்கர் காணி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து, தென்பகுதி சிங்களக் குடும்பங்கள் குடிசைகளை அமைத்து வசிக்க ஆரம்பித்துள்ளன. இவர்களுக்கு சிவில் பாதுகாப்பு படையினர் உதவி வருகின்றனர்.

இதனால் தமிழரின் பாரம்பரிய நிலப்பரப்பு பறிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு சீலலிஹினிகம எனப் பெயர் சூட்டப்பட்ட இடத்தில், புதிதாக சிறி சுதர்சனராமய என்ற பெயரில் புதிய விகாரை ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு, கடந்த 20ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-puthinappalakai.net

TAGS: