சம்பந்தனின் அணுகுமுறை இந்தியாவை விலகிப்போக வைத்துவிட்டது: சி.வி.விக்னேஸ்வரன்

“இலங்கையிலுள்ள தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான இந்தியாவின் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் அணுகுமுறை புறந்தள்ளியது.” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தவறிழைத்துவிட்டதாக அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தியாவுடனான அணுகுமுறையிலும் கூட சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தவறிவிட்டது. இந்த விடயத்தில் உங்கள் அவதானிப்புகள் என்ன?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரனின் முழுமையான பதில் வருமாறு, “இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தன் அதிகளவு நம்பிக்கையை கொண்டிருந்தார். வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாமல் அதிகளவுக்கு நம்பிக்கையை கொண்டிருந்தார். இந்தியாவிடமிருந்து அவர் தன்னை தூர விலத்தி வைத்திருந்தார். அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக உள்ளது என சர்வதேச சமூகத்திற்கு சம்பந்தன் உறுதிப்படுத்தியிருந்தார். தமிழ் மக்களுக்கு போதிய தீர்வை அரசாங்கம் வழங்குமென அவர் நினைத்திருந்தார்.

இலங்கையிலுள்ள தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான இந்தியாவின் பொறுப்பை சம்பந்தனின் அணுகுமுறை புறந்தள்ளியதுடன், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்கான அதன் பொறுப்பு தொடர்பான, இந்தியாவின் சாத்வீக எதிர்ப்புத் தன்மை தொடர்பான இடைவெளியையும் அகலிக்கச் செய்தது. இது ஒரு மாபெரும் தவறாகும்.

தாங்கள் ஆளுமையுடையவர்களோ அல்லது ஆட்களோ அல்ல என்பதையும் எமது மக்களின் பிரதிநிதிகளே என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் அந்தஸ்து மற்றும் கடப்பாடுகளை புரிந்து கொள்ளாதவிடத்து அவர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்று குறிப்பிடுவது அவசியம். அத்துடன், மத்தியில் அண்மையில் அரசியல் ரீதியாக எழுந்திருந்த தனித்துவமான சந்தர்ப்பம் ஒன்றையும் தமிழர்கள் சார்பாக செயற்படுத்துவதற்கு அவர்கள் தவறிவிட்டனர்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: