வடக்கில் போதைப் பொருள்- வேலியே பயிரை மேயும் கொடூரங்கள் பற்றி தெரியுமா?

வடக்கில் போதைப் பொருள் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக சிங்களக் காவல்துறை கூறுகின்றது. இன்றைக்கு வடக்கே போதைப் பொருளின் கேந்திர மையமாக மாறிவிட்டது. கேரளாவில் இருந்து வடக்கின் வழியாகவே உலக சந்தைக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இரண்டு நோக்கங்களுக்காக வடக்கிற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கொண்டுவரப்படுகின்றது. இலங்கையின் பிற பகுதிகளுக்கு கஞ்சா விநியோகத்திற்கும், உலக சந்தைக்கும் கஞ்சாவை அனுப்புவது ஒரு நோக்கம். மற்றையது வடக்கில் இன அழிப்பை செய்வதும் போதைப் பொருளின் கடத்தலின் மற்றைய முதன்மை நோக்கமாகும்.

வடக்கு கிழக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் எப்படி இருந்தது? அன்று இத்தகைய போதைப் பொருட்கள் எல்லாம் துளியேனும் தமிழீழ மண்ணிற்குள் ஊடுருவியதா? தமிழீழ கடற்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழ மண் எவ்வளவு சுதந்திரமாக இருந்தது? வடக்கு கிழக்கு போதையற்ற சிறந்த ஒழுக்க தேசமாக இருந்தது.

இந்த வாள்வெட்டுக் குழுக்கள் எல்லாம் இருந்தனவா? பெண்கள் விடுதலையாகவும் ஒழுக்கமாகவும் வாழ்ந்தார்கள். பெண்கள் இரவு எத்தனை மணிக்கும்  வெளியில் சென்று வரக்கூடிய காலம் என்றால் அது தமிழீழக் காலம்தான். இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. என்றைக்கு சிங்கள அரசின் கைகளில் தமிழீழம் சிக்கியதோ அன்று ஏற்பட்ட நிலை. இன்று வடக்கு கிழக்கே பெரும் துன்பத்தில். 

இது சிங்கள அரசின் திட்டமிட்ட நடவடிக்கை ஆகும். தமிழீழ மண்ணின் பெயரே, கல்வி, ஒழுக்கம் என்ற அடையாளங்களை கொண்டிருந்தது. இன்றைக்கு கஞ்சாவே வடக்கின் அடையாளம் ஆக்கப்படுகின்றது. இது மனதளவில் ஈழத் தமிழ் மக்களை வீழச்சிக்கு உள்ளாக்கும் செயற்பாடு ஆகும். ஈழத்தை, அதன் அடையாளத்தை அழிக்கும் செயற்பாடு.

அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட் பாவனைக்கு அடிமையாகி, இனத்தை அழித்து ஒழிப்பதும் மற்றுமொரு நோக்கமாகும். போதைப் பொருள் யுத்தம் ஆகும். வடக்கில் நடப்பது இன அழிப்புக்கான போதைப் பொருள் யுத்தம் அகும். இதனாலேயே ஈழத்தின் சிறுவர்கள் இன்று இலக்கு வைக்கப்படுகிறார்கள். பாடசாலையை அண்டிய பகுதிகளில் போதைப் பொருள் பாவனை நடக்கிறது.

அண்மையில் வடக்கில் பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வடக்கின் பல பாடசாலையில் பாடசாலை மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு, போதையில் வந்திருந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் சாதாரண தரம் எழுதிய பல மாணவர்கள் குறுகிய சில நாட்களிலேயே இந்தக் கஞ்சாப் பாவனைக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களை இனங்கண்டு, இலக்கு வைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பல மாணவர்கள் இராணுவத்திற்கு போதைப் பொருளை காவுகின்ற நிலமையும் காணப்படுகின்றது. கடந்த சில வருடத்தின் முன்னர், இரணைமடு இராணுவத்திற்குபோதைப் பொருள் கொண்டு சென்ற சிறுவன் மக்களால் பிடிக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் நடந்ததை எவரும் மறந்திரார்.

போரில் தாய், தந்தையை இழந்த பல சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதுடன் போதைப் பொருள் கடத்திலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் இராணுவம் மற்றும் சிங்கள காவல்துறையின் அனுசரனையுடன் அவர்களுக்கும் சேர்த்து போதைப் பொருள் காவுகின்ற துயரம் நீள்கிறது அனுராதபுரத்திலும் யாழ் சிறைச்சாலைகளிலும் போதைப் பொருள் குற்றவாளிகளாக சிறுவர்கள் சிறையில் உள்ளனர்.

கிளிநொச்சியில் போதைப் பொருள் குறித்து தகவல் தெரிவித்த மாணவன் ஒருவர் கடுமையான தாக்கப்பட்டுள்ளார். முதலில் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலையில் அந்த மாணவன் இருந்தார். பின்னர் அவர்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை நடாத்தினார்கள். தற்போது, போதைப் பொருள் தொடர்பில் தகவல் தெரிவித்ததிற்கும் மாணவர்மீதான தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று வடக்கு காவல்துறை அதிகாரி கூறுகிறார்.

உண்மையில் வடக்கில் வேலியே பயிரை மேய்கிறது. வடக்கில் போதைப் பொருளை கடத்தி வியாபாரம் செய்வது மைத்திரி அரசும் அதன் காவல்துறை நிர்வாகமுமே. அவர்கேளே சிறுவர்களை பயன்படுத்தி அவர்களை போதைப் பொருள் குற்றவாளி ஆக்குகின்றனர். அண்மையில் போதைப் பொருள் தடுப்பில் பிலிப்பைன்சை பின்பற்றப் போவதாக மைத்திரி கூறி மூக்குடைபட்டார்.

போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்த வந்த இராணுவத்தினரே கஞ்சாவுக்கு அடிமையானவர்களாகக் காணப்பட்டனர். மைத்திரியின் சொல்லும் செயலும் இதுதான். முதலில் சிங்கள காவல்துறை மற்றும் இராணுவத்தை திருத்த வேண்டும். அவர்கள்தான் ஈழ இனத்தை அழிக்க போதைப் பொருளை கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகளை அழித்த சிங்கள இராணுவத்திற்கு, போதைப் பொருள் கடல் வழியாக வருவதை தடுக்க முடியவில்லை என்பது கேலிக்கூத்தானது. வடக்கு கடல் வழியாக வந்து, பேருந்துகளில் கொழும்பு சென்று வேறு வேறு நாடுகளுக்கும் கடத்தப்படுவதாக சொல்லப்படுகின்றது. வாள்வெட்டுக்குழு, போதைப் பொருள் கடத்தல் என அனைத்தும் சிங்கள அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளே.

இந்த இன அழிப்பு யுத்தத்திலிருந்து ஈழ மக்களை காப்பாற்ற வேண்டியது எமது அனைவரதும் கடமை ஆகும். ஈழத்து ஊடகங்களும் ஈழத்தின் அரசியல் தலைவர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இதில் கடுமையாக பணியாற்ற வேண்டும். பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் சிங்கள அரசின் போதைப் பொருள் போரில் நாம் அழிந்துபோக நேரிடும்.

-eelamnews.co.uk

TAGS: