விக்னேஸ்வரன் சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டத்திற்க்கு ஆதரவு!

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்
சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் –

இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த போதும் அதன் பலாபலன்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட தொடர்ந்து வந்த பாராளுமன்றங்களினால் பல்வேறு அடக்குமுறைகளே கட்டவிழ்த்து விடப்பட்டன.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற யுத்தத்தில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு மற்றும் போர்க் குற்றச் செயற்பாடுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் வீதிகளில் தொடர்ந்தும் இரவு பகலாகத் தீர்வு எதுவும் இன்றி போராடி வருகின்றார்கள்.

சட்டமுறைமைகளுக்கு மாறான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. யுத்தம் முடிந்து 10 வருடங்கள் ஆகியும் தடைச் சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை. பலவந்தமாக தமது காணிகள் பறிக்கப்பட்ட நிலையில் இராணுவமுகாம்களுக்கு முன்பாக நின்று பாதிக்கப்பட்ட எம்மக்கள் தொடர்ந்து இரவு பகலாகப் போராடி வருகின்றார்கள்.

இந்தநிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுதந்திரதினம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை தமிழ் மக்களின் குரலை சர்வதேசத்திடம் ஓங்கி ஒலிக்கச் செய்து நீதி கேட்கும் வகையில் தமிழர் தாயகத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளமை பொருத்தமானது.

இதற்கு எமது முழுமையான ஆதரவைநாம் வழங்குகின்றோம். எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்தப்போராட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள் ” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: