வெனிசுவேலா சர்ச்சை: ஹ்வான் குவைடோவை அதிபராக ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பு

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஹ்வான் குவைடோவை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக சில ஐரோப்பிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும்.

தங்களது நிலைப்பாட்டை மாற்றியமைத்துக்கொண்டு இந்த நாடுகள் குவைடோவை அங்கீகரித்துள்ளன.

புதிதாக தேர்தலை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை அதிபர் நிக்கோலஸ் மதுரோ நிராகரித்ததையடுத்து சில நாடுகள் கூட்டு முடிவு எடுத்துள்ளன.

அமெரிக்கா மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏற்கனவே குவைடோவை ஆதரித்துள்ளன. மதுரோவின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளின் முடிவை, வெனிசுவேலாவின் உள் விவகாரங்களில் அயல்நாடுகளின் தலையீடு என விமர்சித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெனிசுவேலாவில் அதிகாரத்தை பிடுங்கப்பார்ப்பதாக கூறி ரஷ்யா கண்டித்துள்ளது.

நிக்கோலஸ் மதுரோ.
நிக்கோலஸ் மதுரோ.

குவைடோ இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதை ஆதரிப்பது சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், ரத்தம் சிந்துவதற்கான நேரடிப்பாதை என்றும் கூறி ரஷ்யா கண்டித்துள்ளது.

இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்கெய் ரியாப்கோஃப், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஏதோ சாக்குப் போக்கு கூறி ஆர்கனைசேஷன் ஆஃப் அமெரிக்கன் ஸ்டேட்ஸ் உள்ளிட்ட பல அமைப்புகளையும், வெனிசுவேலா மீது அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்துவதாக கூறினார்.

தங்கள் நட்பு நாடான வெனிசுவேலாவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறினார்.

அதிபர் நிக்கோலஸ் மதுரோ-வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு நாடுகள் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளன.

தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், கொலம்பியா, சிலி, பெரு, ஈக்வடார், அர்ஜன்டினா, பராகுவே மற்றும் கனடா ஆகியவை குவைடோ-வை அங்கீகரித்துள்ளன. -BBC_Tamil