மரண விசாரணையில் உண்மை மட்டுமே வெளிவர வேண்டும்- அடிப்பின் தந்தை

நாளை தொடங்கும் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் மரண விசாரணையில் மூடிமறைக்கும் வேலைகள் இருக்காது என்று அவரது குடும்பத்தார் நம்புகிறார்கள்.

அடிப்,24, நவம்பர் 27-இல் சுபாங் ஜெயா, சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் கடுமையாகக் காயமடைந்தார்.

கலவரங்களின்போது தீ வைக்கப்பட்ட வாகனங்களில் தீயை அணைப்பதற்காக அனுப்பப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்களில் அவரும் ஒருவர்.

சிகிச்சைக்காக தேசிய இருதயக் கழகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் காயங்களிலிருந்து மீளாமலேயே டிசம்பர் 17-இல் உயிரிழந்தார்.

அடிப் மரணமடைந்ததற்கு உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ள அவரது குடும்பம் காத்திருப்பதாக அவரின் தந்தை முகம்மட் காசிம் அப்துல் ஹமீட் கூறினார்.

“இதில் மூடிமறைக்கும் வேலைகள் இருக்காது என்று நம்புகிறோம். என் மகனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் நீதிமுன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்”, என்றவர் தெரிவித்ததாக த மலேசியன் இன்சைட் கூறியது.