நஜிப் விசாரணையின் முதல் நாளில் அரசுத் தரப்புச் சாட்சிகள் 9பேர்

பண மோசடி, நம்பிக்கை மோசடி ஊழல் குற்றங்கள் என டஜன் கணக்கான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

நஜிப்பே, மலேசிய வரலாற்றில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் முதலாவது முன்னாள் பிரதமராவார்.

“மிகப் பெரிய திருட்டுக் குற்றம்” என வருணிக்கப்பட்டிருப்பதால் உலகமே நஜிப்மீதான வழக்கை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. அவர்மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை 1எம்டிபி ஊழலுடன் தொடர்புள்ளவை.

பிப்ரவரி 8 தொடக்கம் நஜிப் ஆறு முறை நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டு அவர்மீது 42 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முன்னாள் பிஎன் மற்றும் அம்னோ தலைவருமான நஜிப் குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் மறுத்தார்.