மகாதிர்: விசுவாசம் காட்ட வேண்டியது நாட்டுக்கு ‘முன்னாள் தலைவருக்கோ, கட்சிக்கோ அல்ல’

நாட்டுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர, கடந்த காலத் தலைவருக்கோ அரசியல் கட்சிக்கோ விசுவாசமாக இருப்பது கூடாது என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அரசுப் பணியாளர்களுக்கு நினைவுறுத்தினார்.

இன்று காலை புத்ரா ஜெயாவில், பிரதமர்துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய மகாதிர், கடந்த காலத்தில் சில அரசுப் பணியாளர்கள் நாட்டைவிட சில தலைவர்களுக்குத்தான் அதிக விசுவாசம் காட்டி வந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“நாடு அரசாங்கத்தால் நல்ல முறையில் ஆட்சி செய்யப்பட்டு வரும்போது அரசாங்கத்துக்கு விசுவாசம் கட்ட வேண்டும். ஆனால், முறைகேடுகள் நிகழும்போது குறிப்பிட்ட கட்சிக்கோ தலைவருக்கோ, கொள்கைகளுக்கோ விசுவாசமாக இருப்பதைவிட நாட்டுக்கு விசுவாசமாக இருத்தலே முக்கியமாகும்.

“தலைவர்கள் முக்கியம்தான். ஆனால், அவர்களைவிடவும் நாடு முக்கியம்”, என்று மகாதிர் கூறினார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.