தீயணைப்பு வண்டி பின்னோக்கி நகர்ந்தபோது ஆடிப் வேனில் இருந்தார் – மூன்றாவது சாட்சி

ஆடிப் புலன்விசாரணை | சுபாங் ஜெயா, ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் கலவரத்தின் போது, தீயணைப்பு வீரர் முகம்மது ஆடிப் முகமது காசிம், அவசர மருத்துவ மீட்பு சேவை வாகனத்தில் (இ.எம்.ஆர்.எஸ்.) இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆடிப் மரண விசாரணையில், மூன்றாவது சாட்சியான அஹ்மாட் ஷாரில் ஒத்மான் அத்தகவலை வெளியிட்டார்.

அஹ்மட் ஷாரில் ஒத்மான்

கடந்த நவம்பர் 27-ம் தேதி, கலவரம் நடந்தபோது, இஎம்ஆர்எஸ் வேனை செலுத்தியது தான்தான் என்றும் அஹ்மாட் ஷாரில் தெரிவித்தார்.

“அப்போது ஆடிப் என் பக்கத்தில்தான் இருந்தார், என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.

“தீயணைப்பு வண்டியில் இருந்து ஓர் அதிகாரி, தீயை அணைக்க வெளியானதை நாங்கள் பார்த்தோம். ‘ஹாஷிம் வேகமாக வெளியேறுகிறார்’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம்,” என இன்று, ஷா ஆலாம் புலன்விசாரணை (கொரொனர்) நீதிமன்றத்தில் ஷாரில் சாட்சியம் அளித்தார்.

சம்பவத்தன்று, கோயிலுக்கு எதிர்புறத்தில் இருந்த வாகனத்தின் தீயை அணைக்க, சுபாங் ஜெயா தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நிலையத்திலிருந்த ஹாஷிம், அங்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது. ஹாஷிம் அதிகாலை மணி 1.12 அளவில் சம்பவ இடத்தை அடைந்துள்ளார்.

“தீயை அணைக்க அவர் நீர்க்குழாய் ரீலை இழுத்த போது, திடீரென அவர் தாக்கப்பட்டார், நான் அதனைப் பார்த்தேன்.

“அதன்பிறகு நான் அவரைப் பார்க்கவே இல்லை, அவர் எங்கு போனார் என்று தெரியவில்லை,” என்றார் ஷாரில்.

தீயணைப்பு வண்டியின் பின்னால், சுமார் 2 மீட்டர் தூரத்தில் இருந்த இஎம்ஆர்எஸ் வேனையும் சிலர் தாக்கியதாக ஷாரில் தெரிவித்தார்.

“அப்போது திடீரென, தீயணைப்பு வண்டி பின்னோக்கி நகர்ந்தது. இஎம்ஆர்எஸ் வேனின் முன் பக்கத்தை அது இடித்தது….

“அதேநேரத்தில் தலை கவசம் அணிந்திருந்த சிலர், வேன் ஓட்டுநர் கதவு பக்கத்தைத் தலை கவசத்தால் தாக்கினர். மூன்றுக்கும் மேற்பட்டவர்கள்…. கதவைத் திறக்கச் சொல்லி கூச்சலிட்டனர்.

இச்சம்பவத்தினால், அந்த இரண்டு வாகனங்களும் கலவர இடத்தைவிட்டு வெளியேறி, யூ.எஸ்.ஜே.8 காவல் நிலையத்திற்குச் சென்றன.

காவல் நிலையத்தை அடைந்தபோது, ஆடிப் வேனில் இல்லை என்று ஷாரில் சொன்னதாக, தீயணைப்பு வண்டியின் ஓட்டுநரும், விசாரணையின் 2-வது சாட்சியுமான முகமட் எலிஸா முகமட் நோர் தெரிவித்தார்.

“அதன்பிறகு, நாங்கள் அவரைப் பலமுறை தொடர்புகொண்டோம், ஆனால் அவரிடமிருந்து பதில் வரவில்லை.

முகமட் எலிஸா

“சுமார் 15 – 20 நிமிடங்கள் கழித்து, எங்களுக்கு ஓர் அழைப்பு வந்தது (ஆடிப் தொலைபேசியில் இருந்து), ஆடிப் சைம் டர்பி மருத்துவ மையத்தில் இருப்பதாக கூறப்பட்டது,” என்று சொன்ன எலிஸா, தனது குழுவினரை அங்குச் செல்ல பணித்ததாகக் கூறினார்.

விசாரணை நாளை, இரண்டாம் நாளாக தொடரவுள்ளது. நாளை, மரண புலன்விசாரணை அதிகாரி ரோஃபியா முகமட் தலைமையில், வழக்கறிஞர் குழு சம்பவம் நிகழ்ந்த கோயிலுக்குச் செல்லவுள்ளனர்.