நெகிரி செம்பிலான் எம்பி அலுவலகத்தின் முன், கட்கோ குடியேறிகள் ஒன்றுகூடினர்

இன்று காலை, ஜெம்புல், கம்போங் செராம்பாங் இண்டா (கட்கோ) குடியேறிகள் குழு ஒன்று, விஸ்மா நெகிரி மற்றும் மாநிலச் சட்டமன்ற அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில மந்திரி பெசார், அமினுட்டின் ஹருனைச் சந்திக்காமல், அங்கிருந்து செல்வதில்லை என அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்.

அக்குழுவிற்குத் தலைமை தாங்கிய, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) சிரம்பான் கிளைத் தலைவர், ஆர் விஜயகாந்தி, போராட்டத்தில் இறங்கியவர்கள் மந்திரி பெசாரைச் சந்திக்காமல், அங்கிருந்து விலகப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறினார். இன்றைய இரவை மந்திரி பெசார் (எம்பி) அலுவலகத்தின் முன் கழிக்க அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“இன்று காலை 11 மணிக்கெல்லாம், எம்பி-ஐ சந்திக்க வேண்டும் எனும் எண்ணத்தில் இவர்கள் இங்குக் கூடிவிட்டனர்.

“ஆனால், எம்பியின் அந்தரங்கச் செயலாளர், சலாஹுட்டின், எம்பி அலுவலகத்தில் இல்லை என எங்களிடம் சொன்னார். நாங்கள் இங்கு எம்பியைச் சந்திக்க வருவதாக, கடந்த பிப்ரவரி 4-ம் தேதி, அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பிவிட்டோம்.

“உண்மையில், கடந்தாண்டு டிசம்பர் 27-ம் தேதி, நாங்கள் எம்பியைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், எம்பி வெளிநாடு சென்றுவிட்டதால், அச்சந்திப்பு இரத்தானது. எனவே, இன்று அவரைச் சந்திக்க வருவதாக ஏற்கனவே கடிதம் அனுப்பியப் பின்னரே, நாங்கள் இங்கு வந்தோம்.

“ஆனால், அவர் எங்களைச் சந்திக்க வராமல், அவரின் பிரதிநிதியை அனுப்பி வைக்கிறார்,” என்று காந்தி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

கட்கோ பிரச்சினையைக் கையாளுவதில், மாநில அரசாங்கம் தோல்வியுற்றதாகக் குற்றம்சாட்டி, எதிர்ப்பு வாசகங்களை ஏந்தி குடியேறிகள் அங்குக் கூடியிருந்தனர்.

“14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) வென்ற பிறகு, குடியேறியவர்களைச் சந்திக்க சில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வந்தனர்.

“2018, டிசம்பருக்குள் இந்தப் பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வைக் கொடுப்பதாக அவர்கள் சத்தியம் செய்து சென்றனர்,” என விஜயகாந்தி கூறினார்.

“எம்பி எங்களைச் சந்திக்க ஒரு தேதியை முடிவு செய்து, அதிகாரப்பூர்வக் கடிதமாகக் கொடுக்க வேண்டும், கட்கோ நிலத்தில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டும் தனியார் நிறுவனத்திற்கு, உடனடியாக அதனை நிறுத்த கட்டளையிட வேண்டும். அப்படி அவர் உறுதியளித்தால், இங்கிருந்து கலைந்துசெல்ல நாங்கள் தயார்,” என்று காந்தி மேலும் சொன்னார்.

1977-ஆம் ஆண்டு, சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலப்பகுதி, நெகிரி செம்பிலான் மாநிலப் பொருளாதார மேம்பாட்டு நிருவனத்தால், தி கிரேட் ஆலோனியர்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் பெர்ஹாத் (கட்கோ) எனும் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தால், அதன் உறுப்பினர்களுக்கான நில மேம்பாட்டுத் திட்டத்திற்காக கட்கோ நிறுவப்பட்டது.

அத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு, தற்போது குடியேற்றக்காரர்கள் RM7,600 வைப்புத்தொகையாக செலுத்தியுள்ளனர்.

எனினும், இந்தத் திட்டம் இறுதியில் தோல்வியடைந்து, நிலம் இரண்டு நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காட்கோ கலைக்கப்பட்ட போதிலும், 2006-ம் ஆண்டுவரை நில விற்பனையாளர் நிலத்தை விற்கவில்லை. நில விற்பனை மற்றும் கொள்முதல் உடன்படிக்கை ஒன்று கட்கோ மற்றும் தாமரை ஹோல்டிங்ஸ் சென்.பெர். இடையில் செய்யப்பட்டுள்ளது.